கானகத்தின் குரலாய் கோவைசதாசிவத்தின் “உயிர்ப்புதையல்”கோவைசதாசிவம், கவிஞராகவும்,ஆவணப்பட இயக்குனராகவும்,சூழலிய்ல் ஆர்வலராகவும் பரிணமித்து வருபவர். இயற்கையை அதன் நுட்பங்களை கவிமனத்தோடு ஒன்றி தன் படைப்புகளில் வெளிக்கொணரும் சிறந்த படைப்பாளி!

எற்கனவே “பின்னல் நகரம்”, “வேரடி மண்”, “இரை”, “திசைகளைத்தேடி”, “அறைக்குள் வந்த வெளி” என்று அடர்த்தியான கவிதை தொகுப்புகளும்.

“மண்”, “மயிலு”, “சிட்டு” என்று ஆவணப்படங்களும் எடுத்துள்ளார்.

இப்படைப்புகள் யாவிலும் மேலோங்கி நிற்பது மனிதநேயமும், பிற உயிரினங்கள் மீதான நேசமும்,சுற்றுச்சூழல் பிரச்சனைகளுமே.

இவரது சமீபத்து வரவான “உயிர்ப்புதையல்” காடும், காடு சார்ந்த உலகமுமானது. சூழலில் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு.

இந்த புத்தகத்தை நான் வாங்கி வரும் போதே ‘எதோ காட்ட பத்தி எழுதிருப்பாரு.. ப்ச.. அப்புறமா படிக்கலாம்னு’ அசட்டையாக விட்டுவிட்டேன் .

புத்தகம் என் கண்ணெதிரேயே இரண்டு நாட்கள் கிடந்தது.

பிறகொருநாள் இரவு தூக்க கலக்கத்தில் தான் புத்தகத்தை எடுக்க நேர்ந்தது, படித்தேன்.

முதல் கட்டுரையை வாசிக்க தொடங்கியதும் கானகத்தின் ஊடாக செல்வது போன்றொரு உணர்வு ஆட்கொண்டது. பிறகு மெல்ல,மெல்ல அறைக்குள் சருகுகள் உதிரத்தொடங்கின.

இந்தியாவில் அதிகம் ம்ழை பெய்யும் இடம் எது...?

உங்களுக்கும் எனக்கும் தெரியும். ஆம் “சிரபுஞ்சி”தான்

தமிழகத்தில் அதிகம் மழை பெய்யும் இடம் எது?

அது..... “தேவாலா”. நீலகிரியில் கூடலூருக்கு அருகில் உள்ளது.

32 ஆண்டுக்கு முன் ஆண்டுக்கு 120 நாட்கள் மழை பெய்த இடம்,

ஆனால் இன்று சராசரியாக 30 நாட்களுக்கும் குறைவுதானாம்

என்ன நேர்ந்தது “தேவாலா”வுக்கு?படுக்கையில் இருந்து எழுந்து உட்காந்தேன்.அடுத்தடுத்த கட்டுரையை வாசிக்க,வாசிக்க உட்கார கூட முடியவில்லை.

விதைநெல்லை பற்றி வாசிக்கையில் வேளாண் மக்களின் பண்பாட்டு அடையாளங்களின் ஒன்றான விதைநெல் இன்று பன்னாட்டு கம்பெனிகளான மான் சாண்டோ போன்ற பெருமுதலாளிகளின் லாப வெறிக்கு இரையாவதும், நம் விவசாய நிலமும், வளமும் பறிபோவதும் கண்டு உள்ளபடியே மனம் பரிதவிக்கிறது. மரபணு மாற்ற தொழில் நுட்பம் நம் பயிர்வகைகளை அழிக்கும் முன் ஒன்றிணைந்து ஓங்கி குரல் கொடுப்போம்.!என்று மனம் உந்தியது.

நீரலானது உலகு கட்டுரை வாசிக்கையில் ஆதி நதிகளை நாம் இன்று பாதி நதியாக்கி உள்ளது கண்டு மனம் பதறியது.

“ஆலா மர பஸ் ஸ்டாப் கிட்டே வந்துருங்க” என்று நாம் கலாகாலமாக அடையாளப்படுத்தி வந்த ஆலமரங்கள் இன்று அழிந்து காங்கிரீட் காடுகளாய் மாறி வரும் சூழலில், அந்த ஆலமரங்களிடம் இத்தனை ஆற்றலா?!! என்று வியப்பளிக்கிறது.!

அருகி வரும் இருவாச்சிகள் கட்டுரை இரு பறவைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தைப்போல சுவாரஸ்யமானதாய் இருக்கிறது. இருவாச்சி பறவைக்கு தமிழில் “மலைமொங்கான்” என்று பெயராம், அவற்றின் வாழ்க்கை முறை படிக்க,படிக்க ஆச்சர்யம்!

மனிதனுக்கு மட்டுமே ஆறறிவாம் யார் சொன்னது? இருவாச்சிகளின் வாழ்க்கை முறை பற்றி படித்து பாருங்கள் உண்மையிலேயேவியந்து விடுவீர்கள்.

கானகம் ஒரு கருவூலம், உயிர்களிடத்தில்...., புல்வெளி மீது வரையாடுகள், இராகுல்ஜியின் நூல்-ஒரு மீள்பார்வை என்று தொடருகிறது கட்டுரை.

நொய்யல்:உயிரூட்ட வேண்டிய நதி கட்டுரையில் மனம் நிலைகுத்தி நின்றது. வளமாய் வாழ்ந்த நதி. என் வயதொத்த இந்த குறுகிய காலத்திலே சாக்கடையாய் மாறி போனதே! மனம் குமுறுகிறது. என்ன செய்ய?!!

நொய்யலின் ஆதி வரலாறு படிக்க,படிக்க சிலிர்க்கிறது! கி.மு.3-ஆம் நூற்றாண்டிலேயே கிரேக்கர், ரோமர், யூதர், அரேபியர் போன்ற அயல்நாட்டு வணிகர்கள் நொய்யல் நதிக்கரை மக்களோடு வணிக உறவு கொண்டிருந்தனர் என்பது கண் முன் காவியக்காட்சியாக விரிகிறது.

நதிக்கரையோரம் நாகரீகம் வளர்ந்ததாம், அப்படி வளர்ந்த நாகரீகம் இன்று நதியை கரைகாணசெய்யாது அழித்து வருகிறது.

இன்றைய நாகரீக கழிவுகள் ஆற்றில் மலையென குவிந்து மாசுபடுத்திவருகிறது.
உயிரினங்கள் நிலத்தையும்,நீரையும்,காற்றையும் வாழ்விடமாக பயன்படுத்த, மனிதன் மட்டுமே மூன்றையும் தனது சுயலாபத்துக்காக பயன்படுத்தி இன்று அழிவு நிலைக்கு கொண்டுவந்துள்ளது கோரம்!
நீலகிரி நிலச்சரிவுக்கு வேறென்ன காரணமாய் இருக்கும்?


நொய்யலில் கலக்கும் கழிவில் என் கழிவும் கலந்தே இருக்கிறது என்பது கடும் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகிறது.ஆடையின் வண்ணம்,அளவு,நேர்த்தி,வேலைப்பாடுகள் என்று எல்லவற்றையும் அங்கிருந்தே “ஆர்டர்” இடும் பெருமுதலாளி அததற்க்கு உண்டான இயந்திரங்களையும் அவனே தயாரித்தும் அனுப்புகிறான், ஆனால் இறுதிக்கழிவுகளை அழித்தொழிக்கவோ, மறுசுழற்ச்சி செய்ய இயந்திரம் எதும் கண்டுபிடித்ததாய் காணோம்!அனுப்பும் பனியனில் கேடுவிளைவிக்கும் நச்சு கலந்திருக்கிறது “முதலாளி” கோபித்துக்கொண்டார் என்று முன்பொரு சமயம் ஒரு குறிப்பிட்ட அழுக்கு நீக்கும் ஆயிலை ஒட்டுமொத்த பனியன் நிறுவனங்களும்தவிர்த்தன அது இன்று வரையிலும் தொடர்கிறது.

ஆனால் பெருகும் நீர்,நில,காற்று மாசுபாட்டால் இன்னும் சிலகாலத்தில் திருப்பூரில் தயாரித்து அனுப்பும் எல்லா பனியனிலும் நச்சு கலந்திருக்கிறது என்று முதலாளி ஆர்டரை கேன்சல் செய்வார் சாதாரணமாக, பிறகு நிலமும் இருக்காது தொழிலும் இருக்காது.


முடிந்தால் கவசஅறை கட்டி பனியன் தயாரிக்கும் சூத்திரம் தயாரித்து அனுப்புவார் நம்மவர்க்கு.ஆமாமா பின்ன செய்யும் தொழிலே தெய்வமன்றோ!

அடுத்தடுத்த கட்டுரைகளை வசிக்க மனசு ஒருமாதிரி ஆகிவிட்டது. யானைகளின் வ்ழித்தடத்தை அழித்து, அதன் வாழ்வை சிதைத்து வரும் பதிவுகளை கண்ணீரோடுதான் உள்வாங்கமுடிகிறது.


கோவைசதாசிவம் அவர்கள் வார்த்தைகளோடு ,வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு நிலைக்கு நம்மை அழைத்துசென்றுவிடுகிறார். குற்றவுணர்ச்சிக்கு மனம் ஆட்பட்டுவிடுகிறது.
முன்பொரு சமயம் நகரில் அனுப்பர்பளையத்தில் நடந்த ஒரு இலக்கிய அமர்வில் கோவைசதாசிவம் அவர்கள் “அவன் காட்டைவென்றான்” என்றொரு மொழிபெயர்ப்பு குறுநாவலை கதையாய் விவரித்தார் அவர் கதையை விவரித்த விதம் அடேயப்பா...! மெய் சிலிர்த்தது, காட்டுமரங்களின் ஒவ்வொரு அசைவுக்கும்,சிறுபறவைகளின் சப்தங்களுக்கும் எத்தனை,எத்தனை அர்த்தங்கள்.இத்தனைக்கும் அந்த கதை ஒரு கிழவனையும்,அவனது வளர்ப்பு பிராணியான நிறைமாத பன்றியையும் பற்றியதுதான். ஆனால் கதை நடக்கும் இடம் “காடு”இயல்பாகவே கானகத்தை பற்றியும்,கானக உயிரினங்களைபற்றியும் கோவைசதாசிவம் அவர்களுக்கு உள்ள மட்டற்ற ஆர்வம் அவரது அன்றைய நிகழ்விலும் வெளிப்பட்டது.பிறகு நான் அந்த புத்தகத்தை வாங்கி படித்து ஏமாந்தேன். ஏனெனில் அவர் விவரித்த காடும்,உயிரினங்களும்,சூழலும் என் கற்பனையில் வரவே இல்லை.
இந்த தொகுப்பிலும் அதுபோலவே பிரச்சனைகளை முன்பே நீங்கள் அறிந்திருந்தாலும் அவர் விவரிக்கும் விதம் உண்மையிலேயே பிரச்சனையை நீங்கள் நெருக்கமாக,நேரடியாக உணர முடியும். அது வெறுமனே அனுபவத்திற்காக மட்டுமல்ல!
கட்டுரையில் ஓரிடத்தில் “சமவெளியில் ஏராளமான மரங்களை நட்டு நாம் தோப்புகளை வேண்டுமானால் உருவாக்கலாம் ஒருபோதும் காடுகளை மனிதன் உருவாக்க முடியாது” என்ற வரி மனதை விட்டகலா நிற்கிறது!!!
தூக்கம் தொலைந்தது.ஒரு நல்ல புத்தகம் மனதுக்குள் என்னவெல்லாம் செய்யுமென்று அன்றிரவு உணர்ந்துகொண்டேன்.கோவைசதாசிவம் அவர்களின் வார்த்தை பிரயோகம் நம்மனங்களை கிளறி இயற்கயின்பால் ஆர்வத்தை உந்துகிறது.அனுபவித்து பாருங்கள்!
காலையில் உலகமே எனதாய் பட்டது! சுற்றிலும் இயந்திரகதியில் மனிதர்கள், இயற்கை என்னிடம் மட்டும் எதோ சொல்வதுபோல இருந்தது. எதாவது செய்யவேண்டும்!
என்ன செய்ய போகிறேன்(றோம்)?

கோவைசதாசிவம்@
4/610குறுஞ்சிநகர்
வீரபாண்டி போஸ்ட்
திருப்பூர்641602
பேச:9965075221

வெளியீடு:
வெளிச்சம் வெளியீட்டகம்
1447,அவினாசி சாலை
பிளமேடு
கோயமுத்தூர்641004
போன்:0422-4370945

கருத்துகள்

 1. மிக அருமையான உணர்வு பூர்வமான பதிவு ரவி.. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வழ்த்துக்கள் ரவி.உங்களின் ஆர்வம் உங்களுக்கான பாதையாகவும் வாகனமாகவும் மாறி உங்களை பல்வேறு திசைகளில் பயணிக்க வைக்கிறது.நல்ல நடையும் கைகூடிவருகிறது உங்கள் பணி சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி அஜயன்பாலா சார்,நன்றி சங்கர் சார் நிச்சயம் உங்களின் மேலான வழிகாட்டுதலிலேயே இது சாத்தியம்!

  நன்றி என் நண்பா ராமு.

  பதிலளிநீக்கு
 4. உங்களின் நல்ல பாதை தெரிகிறது. இடுகையின் தொழில் நுட்பமும் விரைவில் வந்து விடும் என்று நம்புகிறேன். வடிவமைப்பு சரியாக வந்து விட்டால் இன்னும் சிறப்பாக அமைந்து விட்டால் உங்களின் அக்கறை சேர வேண்டிய இடங்களுக்கு சேர்ந்து விடும். Voted.

  பதிலளிநீக்கு
 5. நல்ல புத்தக விமர்சனம் ரவி!

  இயற்கை நம் கையை விட்டுப் போய்க் கொண்டு தானிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. நன்றி ஜோதிஜி.
  நன்றி வெயிலான் சார்!

  பதிலளிநீக்கு
 7. பிளாக் நேம் எங்க சுட்டதுனு தெரிஞ்சு போச்சு.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்