அம்மாவின் வாழ்க்கைப்பதிவு        1967ம் ஆண்டு நம்பியூரை அடுத்த பட்டிமணியகாரம்பாளையத்தில் சரஸ்வதி-ரங்கசாமி தம்பதிக்கு, அவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு மூத்த மகளாக பிறந்தார் கல்யாணி.  கல்யாணி பிறந்து ஒன்றிரண்டு வருடங்களிலேயே அவரது அம்மா சரஸ்வதி உடல் நலம் குன்றி இறந்துவிட்டார். அதனால், அவர் தன் தாய்முகத்தை நினைவுகொள்ளாத மகளாகவே வளர்ந்தார். அப்பா ரங்கசாமி நெசவுத் தொழிலாளி.  கல்யாணி பட்டிமணியகாரம்பாளையம்  தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படிப்பை முடித்தவர்.  பின் அப்பாவோடு நெசவுக்கு துணையாக வீட்டில் இருந்துவிட்டார். அவரது அம்மாவின் அண்ணன் பாட்டப்பன் அவர்கள் அருகிலிருக்க, மாமன் மகள் சம்பூர்ணா ஆகியோர் துணையோடு, தனது இளமைக்காலத்தைக் கடந்தார். சிறுவயதிலேயே துண்டு பேப்பர் கிடைத்தாலும், அதை முழுக்க வாசித்துவிடும் வாசிப்பு பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது.  ஒருமுறை மாமா வீட்டிற்கு கோபி சென்றிருந்த சமயம், வேடிக்கையாக திரையரங்கத்திலிருந்து, சினிமா கதை வசன சப்தம் கேட்க, அதன் அருகிலிருந்த மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டாராம்.  இது தெரியாமல் கல்யாணியை காணோம் என்று பயந்துபோய் தேடி அலைந்து கடைசியில் மரத்திலிருப்பவரை கண்டுபிடித்திருக்கிறார்கள். 

       கல்யாணியின் அப்பாவிற்கு பெயர் என்னமோ ரங்கசாமி என்றாலும் பெரும்பாலும் அவரை எல்லோரும் சீனாக்காரன்   என்ற பட்டபெயர் வைத்து அழைப்பது தான் வழக்கம்


அவரது ஒடிசலான தேகம் பூனைக்கண் ஆகியவை அவரை அப்படி அழைக்கக்காரணம்.  அவர் ஓரிடத்தில் அமர்ந்து இருக்க விரும்பாத குணம்படைத்தவர்.  சைக்கிளில் தினசரி டவுண் வரை போவதும், வருவதுமாக இருப்பார் என்று சொல்கிறார்கள்.  இந்த நிலையில் தொழில் மந்தம் காரணமாக மணியகாரம்பாளையத்தில் இருந்து புன்செய் புளியம்பட்டிக்கு குடிபெயர்கிறார் மாமன் பாட்டப்பன் அவர்கள்.  இன்னொருபுறம், அப்பா ரங்கசாமி அவர்களின் உடன்பிறந்த சகோதரர்கள் பிழைப்பிற்காக திருப்பூர் சென்றுவிடவே, திருப்பூர் நிலவரம் அறிய ரங்கசாமியும் திருப்பூர் சென்று வருகிறார். திருப்பூர் வந்து பார்த்தவருக்கு இங்கு நன்றாக வாழலாம் என்ற தைரியம் ஏற்பட, ஊருக்குத் திரும்பி வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு சிறிய தொகையுடன் மகள் கல்யாணியை அழைத்துக்கொண்டு திருப்பூர் வருகிறார்.

       திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்டை அடுத்த தென்னம்பாளையம் (கோட்ரஸ்) பகுதிக்கு வருகிறார்கள். அங்கு ரங்கசாமி அவர்களின் அண்ணன் சின்னமுத்து, தம்பி பசுபதி ஆகியோர் குடும்பத்துடன் இருக்க அதற்கு அருகிலேயே வாடகை வீடு எடுத்து தங்கி, ரங்கசாமி அவர்கள் நெசவு வேலை செய்கிறார்.   அப்போது கல்யாணிக்கு வயது 15.

       இப்படி போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் அதிர்ச்சிதரத்தக்க வகையில் அப்பா ரங்கசாமி பழைய பஸ் ஸ்டேண்ட் எதிரே உள்ள காய்கறி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக்கொண்டு நடந்துவர வர கீழே விழுந்து மூர்ச்சையாகிறார். அவரது தம்பி மகன் ராசு (என்கிற பாலசுப்ரமணியம்) அவரை தூக்கிகொண்டு, ஆட்டோவில்  மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் மெல்ல கண்விழித்தவர் “கல்யாணிய பார்த்துக்க என்று கடைசி வார்த்தையை உதிர்த்துவிட்டு மருத்துவமனையில் சேர்த்த சிலநிமிடங்களிலேயே  இறந்துவிடுகிறார். சிறுவயதில் அம்மா முகமே காணாத கல்யாணி பருவ வயதில், ஒரே துணையான அப்பாவையும் இழந்து நிற்கதியாக நிற்கிறார்.  அப்போது அவரது சித்தப்பா மகன் ராசு குடும்பம் அவருக்கு ஆதரவாக நின்று அவரைப் பார்த்துக்கொள்கிறார்கள்.  குமரானந்தபுரம் பகுதியில் இருந்த ராசு அவர்கள் ‘பத்மா'  மளிகை கடை என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். மெல்ல அப்பாவின் இழப்பிலிருந்து மீண்டு வந்த நிலையில், 17 வயது நிரம்பிய கல்யாணிக்கு திருமணம் செய்து வைத்து கரையேத்திவிடலாம் என்று திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். சில வரன்கள் வந்து போக, அப்போது இன்னொருபுறம் குமரானந்தபுரத்தில் சாந்தி தியேட்டர் எதிர்புறம் உள்ள சுடுகாட்டிற்கு அருகில் அமைந்த புகழும்பெருமாள் புரத்தில் வாழ்ந்துவரும் கண்ணம்மா அவர்களின் மகனான ராஜேந்திரன்-க்கும் பெண் பார்த்து வருகிறார்கள்.  ஏற்கனவே பார்த்த இரண்டு வரன்கள் அவருக்குப் பிடிக்காமல் போயிருக்கிறது. இந்தநிலையில் அன்று குமரானந்தபுரம் கட்சிக் கிளை அலுவலகத்தில் அமர்ந்திருந்த ராஜேந்திரனை ஒரு நிமிஷம் வாப்பாஎன்று கூட்டிப்போகிறார் கட்சி தோழர் பிரபாகரன். எதுக்கு என்று தெரியாமல் அவருடன் போகிறார் ராஜேந்திரன்.  நேராக பத்மா  மளிகைக்கடைக்கு எதிரே இருந்த டீ கடையில் அமர்த்தியிருக்கிறார். அப்போது கல்யாணி மளிகைக்கடைக்கு வந்து செல்லும் சமயம் பார்த்து ராஜேந்திரா! “அந்த பொண்ணப் பாரு எப்படி இருக்கு?என்று கேட்க அந்த பொண்ணுக்கென்ன நல்லாத்தான் இருக்குஎன்று சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் வீட்டுக்கு வந்துவிடுகிறார். மறுநாளே ராஜேந்திரன் அம்மா கண்ணம்மா “என்னடா நேத்து ஒரு பொண்ணு பார்த்து புடிச்சிருக்கு சொன்னியாம அதயே பார்த்திடலாமா என்று கேட்க இவருக்கு ஷாக். பிரபாகரன் இதற்காகத்தான் தன்னை கூட்டிச்சென்றார் என்றே அப்போதுதான் தெரிந்தது.  இப்படியாகத்தான் பெண்பார்க்கும் ஏற்பாடு ஆரம்பித்திருக்கிறது.

       காமாட்சியம்மன் கோவில் பின்புறம் மருதாசலபுரம் ரோட்டில் அமைந்துள்ள ராசு அவர்கள் வீட்டில் வைத்து, பெண் பார்க்கும் நிகழ்வு நடக்கிறது.  இருவருக்கும் பிடித்துப்போகவே மளமளவென திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.  24 வயதான ராஜேந்திரன் கம்யூனிஸ்ட் கட்சியில் துடிப்பான செயல்பாடு உடையவராக இருக்கிறார். அவர் தன் அம்மா கண்ணம்மா, அண்ணன், தம்பி ஆகியோரோடு இருக்கிறார். பனியன் கம்பெனியில் அயர்ன் தொழில் செய்துவருகிறார்.

        1983ம் ஆண்டு பழைய பஸ் ஸ்டேண்ட் பின்புறம் உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடந்த இலவச திருமண  நிகழ்வில்  பதினோரு ஜோடிகளில் ஒன்றாக இவர்களிருவருக்கும்  திருமணம் நடக்கிறது.

       திருமணம் நடந்து இருவரும் மகிழ்வோடு வாழ்க்கையை தொடங்க அடுத்த வருடமே 1984ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி கல்யாணிக்கும் ராஜேந்திரனுக்கும் அவினாசி ரேட்டில் பங்களா ஸ்டாப் அருகில் உள்ள கந்தசாமி செட்டியார் தாய் சேய் மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறக்கிறது.  அந்த குழந்தைக்கு குமரானந்தபுரம் காமாட்சியம்மன் கோவிலில்  ரவிக்குமார் என்று பெயர் வைக்கிறார்கள். (அம்மா கல்யாணியின் வாழ்க்கை குறிப்பை எழுதும் நான் பிறந்தது அப்போதுதான்).

        1984ம் ஆண்டு திருப்பூரை வாட்டிய பஞ்சப்படி வேலைநிறுத்தம் உள்ளிட்ட கடும் சோதனைக்காலத்தை கடந்துவருகிறார்கள்.  ராஜேந்திரன் கம்யூனிஸ்ட் கட்சியில் துடிப்பாக இருந்துகொண்டு, இன்னொருபுறம் பனியன் கம்பெனியில் வாரச்சம்பளத்திற்கு வேலையும் செய்துவருகிறார். ஏழ்மையான நிலையிலேயே குடும்பம் நடத்திவருகிறார்கள்.  குடும்பம் நடத்த ஒருவர் சம்பளம் போதாது என்று கல்யாணியும் வீட்டிற்கு அருகே டப்பா மிஷின் என்று சொல்லப்படும் ராட்டையில் நூல் நூற்கும் இயந்திரத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்.  குடும்பம் தடுமாறாமல் செல்ல ஆரம்பிக்கிறது. கஷ்ட நஷ்டம் வந்த போதும் அதையெல்லாம் சமாளித்துக்கொண்டே இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.

        1986ம் ஆண்டு இரண்டாவதாக கருவுற்ற கல்யாணி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இரண்டாவதாக பிறந்த ஆண்குழந்தைக்கு விஜயகுமார் என்று பெயரிட்டு மகிழ்ந்திருந்த மகிழ்ச்சி, நான்கு மாதத்திற்கு மேல் நீடிக்கவில்லை. திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நான்கு மாத கைக்குழந்தை விஜயகுமார் இறந்துவிட, பெரும் சோகம் சூழ்ந்துகொள்கிறது. தாய் தந்தையைரை இழந்த கல்யாணிக்கு பெற்ற குழந்தையையும் இழந்த சோகம் பெரிதும் வாட்டியது. மெல்ல அதிலிருந்து மீண்டு இயல்புவாழ்க்கைக்கு திரும்புகிறார்.  மூன்று வருடங்கள் ஓட 1989ல் பெண் குழந்தை பிறக்கிறது. அதற்கு காயத்ரி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். முதல்மகன் ரவிக்குமார்  கடைசி மகள் காயத்ரி இருவரும் போதுமென இருவரையும் குறையின்றி வளர்த்து வந்தார்கள். மகனும் மகளும் குமரானந்தபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் படித்துவருகிறார்கள்.  ஆண்டுகள் கடக்க ராஜேந்திரன் பனியன் கம்பெனியில் அயர்னிங் வேலை செய்துவர, கல்யாணி நூல் ஓட்டும் வேலையை தொடந்துவருகிறார்கள்.

       நான் (மகன்) தொடக்கப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற சமயத்தில் கல்யாணி நூல் ஓட்டும் வேலை செய்துவந்த கம்பெனியில் ஆர்டர் கொடுத்து வந்த ஜெகதீஸ், விஜய் இருவரும் கல்யாணியின் குடும்பநிலவரம் அறிந்து நீங்கள் சிறிய முதலீட்டில் சொந்தமாக மிஷின் போட்டு தொழில் தொடங்குங்கள்.  நாங்கள் ஆர்டர் தருகிறோம் என்று சொல்ல, கல்யாணியும் ராஜேந்திரனும் யோசித்தார்கள். இதுவரை சம்பளத்திற்கே வேலை செய்து பழகிய நாம் சொந்தமாக தொழில் தொடங்க முடியுமா? இது சரியாக அமையுமா? தடுமாற்றம் ஏற்பட்டுவிடாதா? என்று யோசிக்க, கல்யாணி நிச்சயம் இது சரியாக வரும் என்று கணவரிடம் நம்பிக்கையாக சொல்ல தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி, சீட்டு போட்டு சேர்த்த பணம் உள்ளிட்ட முதலீட்டை சேர்த்து  1999ம் ஆண்டு மருதாசலபுரம் மெயின்ரோட்டில் மாடியில் ஆஸ்பெட்டாஸ் கூரையின்கீழ் சிறிய அளவில் வீடும், தொழிற்சாலையில் ஒரே அறைக்குள் இருக்கும்வண்ணம் டப்பா மிஷின், கோன் வைண்டிங் மிஷின் இரண்டும் நிறுவி தொழிலை நம்பிக்கையோடு தொடங்கினார்கள்.  அந்த காலகட்டத்தில் விஜய், ஜெகதீஷ் இருவரும் சகோதரர்கள் போல உதவினார்கள். அப்போதும் ராஜேந்திரன் பனியன் தொழிலை முழுவதுமாக கைவிடவில்லை பாதுகாப்பிற்காக அதிலொரு கால் வைத்திருந்தார். மற்றவர்களிடம் சம்பளத்திற்காகவே கடினமாக உழைக்கும் கல்யாணி தாம் தொடங்கிய தொழிலில் மிகுந்த ஈடுபாட்டோடு நேரம் காலம் பார்க்காமல் உழைக்க ஆரம்பித்தார். மெல்ல மெல்ல கோன் வைண்டிங் தொழில் நம்பிக்கையளிக்கவே  ராஜேந்திரன் அவர்களும் முழுநேரமாக கோன்வைண்டிங் தொழிலுக்கு மாறினார். மகன் ரவிக்குமாரும் மகள் காயத்ரியும் பள்ளிவிட்ட பின்னர் அம்மா அப்பாவிற்கு உதவும் விதமாக கோன் வைண்டிங்கில் வேலை செய்துவந்தார்.

       ராஜேந்திரன் அவ்வப்போது கட்சி வேலை என்று சென்றுவந்தாலும், கல்யாணி தொழிலை கவனிப்பதில் முனைப்பாக இருந்தார். அப்போது கல்யாணி ராஜேந்திரன் இருவருக்குமே வாழ்க்கை என்பது அந்த நூல் ஓட்டுவது மிஷின் சப்தத்திலேயே உண்பது உறங்குவது என்பதாகவே இருந்தது.  மிஷின் சப்தம் நின்றால் தான் உறக்கம் கலைந்துவிடுமே தவிர மிஷின் சப்தம் ஒருபோதும் இடைஞ்சலாக இருந்ததில்லை. அதுவே வாழ்க்கையானது.  ஒரு டிவிஎஸ் 50 வண்டி வாங்கியதே குடும்பத்தில் அத்துணை மகிழ்வை கொடுத்த தருணமாக இருந்தது.  வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு தவறாமல் சினிமாவிற்கு செல்வது வாடிக்கையானது. நால்வரும் ஒரே டிவிஎஸ் 50ல்  அமர்ந்துசென்ற அந்த இன்பம் மிகப்பெரியது.

                      

       ஒருமுறை மகன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடலாமா என்று குடும்பத்தில் விவாதம் வந்தபோது இல்லை அவன் பள்ளிப்படிப்பை முழுவதுமாக நிறைவு செய்தே ஆகவேண்டும் என்று உறுதியாக இருந்தவர் கல்யாணி.

       இப்படியாக, நிம்மதியாக கூலிக்கு நூல் ஓட்டிக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று கூலிக்கு ஓட்டுவது ஓரேடியாக தடைபட்டது. கூலிக்கு கொடுத்துவந்தவர்களே, மிஷின் நிறுவி ஓட்டிக்கொள்ள தொடங்கிவிட்டதுதான் காரணம். அப்போது அடுத்து என்ன செய்வது? என்று குழம்பிய தருணம் இந்த குடும்பத்தின்மீது அக்கறையுள்ள ஏ.ஜே.பிளாமண்ட் உரிமையாளர்களான ராஜு, விஜய் இருவரும் நீங்களே சொந்தமாக நூலை (கோனை) கம்பெனிக்கு விற்பனை செய்யுங்கள் நாங்கள் கடனுக்கு தருகிறோம் என்று சொல்லி நம்பிக்கையளித்தாலும், பெரும் யோசனை.  நூல் ஓட்டுவது, கூலிவாங்குவது என்று பிரச்சனையில்லாமல் சென்ற தொழிலில் சொந்தமாக செய்தால் எப்படி இருக்கும்? லாபகரமாக நடத்திவிடமுடியுமா? என்ற யோசனையில் குடும்பமாக சேர்ந்து செய்துவிடலாம் என்ற நம்பிக்கை வரவே  துணிந்து சொந்தமாக (தையல் நூல்) கோன் வியாபாரத்தை தொடங்கினோம். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை வரும்போதெல்லாம் கல்யாணியின் அசாத்திய துணிச்சல் ஒன்றே அடுத்த அடி எடுத்துவைக்க பெரிதும் உதவியிருக்கிறது. இப்படி தொடங்கப்பட்ட தொழிலுக்கு காயத்ரி டிரேடர்ஸ்  என்று மகள் பெயரே  வைக்கப்பட்டது.

       மகன் ரவிக்குமார் பள்ளிப்படிப்பை முடித்ததும், முழுநேரம் கல்லூரி சென்று படிக்காமல் தபால் வழியில் பி.காம்., பட்டப்படிப்பை படித்தவாறு அம்மா, அப்பாவிற்கு உதவியாக தையல்நூல் விற்பனையின் இணைந்துகொள்ள, சுமூகமான சூழ்நிலை நிலவியது. அவ்வப்போது தொழில் ஏற்ற இறக்கங்களோடு இருந்தாலும் வாழ்க்கையை நடத்துவதில் பிரச்சனை வந்ததில்லை.

இனி என் குரலில் பதிவு செய்கிறேன்.

       ஒன்றிரண்டு வருடங்களிலேயே வீட்டோடு செய்துவந்த வியாபாரத்தை கொஞ்சம் விரிவு செய்து, சிவன் தியேட்டர் அருகில் ஒரு சிறிய நூல் கடையை தொடங்கினோம். மெல்ல வியாபாரத்தில் ஒரு சீரான நிலையை அடைய முடிந்தது. தங்கை காயத்ரி குமரன் கல்லூரியில் எம்.காம்., பட்ட மேற்படிப்பை நிறைவு செய்தாள்.

       நூல் வியாபாரத்தை செய்துகொண்டே நான் குறும்படம் எடுக்கிறேன் என்று சினிமா பக்கம் கவனத்தை திருப்பியதும், அப்பா கொஞ்சம் பயந்தார். தேவையில்லாத வேலை என்று நினைத்தார். அப்போது, அம்மா என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு வீட்டின் நிலைமையை எடுத்துச்சொல்லி பேசினார்.  அம்மா அப்பா என்மீது வைத்துள்ள பொறுப்பை உணர்ந்துகொண்டேன். நிச்சயம் சொந்தவீடு கட்டி, தங்கை திருமணம் முடியும் வரை நான் முழுக்கவனத்தை அதன்பக்கம் திருப்பிவிடமாட்டேன் என்று அம்மாவிடம் உறுதியளித்தேன்.

       சொந்த வீடு கட்டவேண்டும் என்பது அம்மா கல்யாணியின் வாழ்நாள் விருப்பமாக இருந்தது. அனுதினமும் ஒரு இடம் வாங்க வேண்டும், வீடு கட்டவேண்டும், நல்ல நிலைக்கு உயரவேண்டும் சாதாரணமாக வாழ்வை கடந்துவிடக்கூடாது என்று பெரிதும் ஆசைப்பட்டார். அதை என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். அதுபோலவே புதிய பேருந்து நிலையம் பின்புறம் ஒரு இடம் விற்பனைக்கு வந்திருக்கிறது அதற்கு 4லட்சம் தேவை என்ற போது அப்பா கொஞ்சம் தயங்கினார். ஆனால், அம்மா மிகவும் துணிவோடு அந்த இடத்தை வாங்குவதில் தீவிரம் காட்டி, சிறுக சிறுக சேர்த்த நகைகள் அத்தனையும் விற்று, சோளிபாளையத்தில் இருந்த (பெரிதும் விலை போகாத) இடத்தையும்  விற்று இந்த இரண்டேகால் செண்ட் இடத்தை வாங்கியாயிற்று.  திருமணமாகி 25 வருடங்களாக வாடகை வீட்டிலேயே வசித்துவிட்டு சொந்தமாக ஒரு இடம் அதும் வசிக்கும் ஏரியாவிற்குள்ளேயே வாங்குவதென்பது எளிமையான குடும்பத்திற்கு சாதனையாக இருந்தது. அந்த இடத்தில் ஒரு சிறிய ஆஸ்பெட்டாஸ் கூரை அமைத்து வீட்டை உருவாக்கினோம். வயதான உடல்நலம் குன்றிய  ஆயா கண்ணம்மாவை அதில் தங்க வைத்தோம். அவரது உயிர் சொந்த இடத்தில் நிம்மதியாக பிரிந்தது.

       சிலவருடங்களில் அதே இடத்தில் கட்டிடம் கட்ட முடிவெடுத்தோம். அதுவும் வழக்கம் போல சவாலான காரியம்தான். கையில் ஒன்றுமே இல்லாமல் வீடுகட்டும்  முடிவை அம்மா எடுத்தபோது அப்பா திகைத்துவிட்டார். எப்படி இது சாத்தியம்? மாட்டிக்கொள்வோம் என்று பயந்தார். அப்போதும் அம்மா முடியும்! துணிந்து செல்வோம்! வழிபிறக்கும் என்று இறங்கினார். ஆம், வழி பிறந்தது. எல்..சி ஹவுசிங் லோனில் 6 லட்சம் லோன், மீதமுள்ள சோளிபாளையம் இடம், சீட்டு சேர்ந்து எடுத்த தொகை, நகை என எல்லாவற்றையும் போட்டு வீட்டை நிமிர்த்தினோம். வீடு கட்டியது அதுவரையிலான வாழ்வில் மிகப்பெரிய முழுமையை எட்டிய நிகழ்வாக இருந்தது. வாடகை வீட்டிலேயே வளர்ந்த எங்களை சொந்த வீட்டில் வாழவைக்க அம்மா அத்துணை ஆசை கொண்டிருந்தார். அது நடந்த தருணம் அம்மாவிற்கு மிகப்பெரிய சந்தோஷம் அதுவாகத்தான் இருந்தது. தங்கை காயத்ரி திருமணத்திற்கு முன் சொந்த வீட்டில் வாழ்ந்துவிட்டுதான் புகுந்தவீடு செல்ல விரும்பினாள், அதை நடத்தியதில் நாங்களெல்லோரும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.

       தங்கை காயத்ரிக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தோம். வரன் பார்த்து  மாப்பிள்ளை வீட்டார் பற்றி விசாரித்து, நல்ல இடத்தில் வாழவேண்டுமென அம்மா ரொம்பவும் பிரயத்தனப்பட்டார்.  அவர் எண்ணியது போலவே மாப்பிள்ளை மணிகண்டன் அமைந்தார். இந்த விசயத்திலும் வழக்கம் போல, அம்மாவே ஒரு அடி முன்னால் இருந்தார். அன்பான கைகளில் மகளை ஒப்படைத்தது அம்மாவிற்கு மிகப்பெரிய நிம்மதி கொடுத்தது. இதை எழுதும் இந்த தருணம் கூட அம்மா மாப்பிள்ளையை பற்றி அவ்வளவு உயர்வாக கூறியதை நண்பர் ஒருவரிடம் போன் வாயிலாக கேட்க நேர்ந்தது.

        2010க்கு பிறகு நான் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி, பின் சூதுகவ்வும் திரைப்படத்தில் பணி புரிந்தது என்று என் வாழ்க்கைப்பாதையை சினிமா நோக்கி அமைத்துக்கொண்டேன். ஆரம்பத்தில் என் வாழ்க்கை தடுமாற்றமில்லாமல் இருந்துவிடுமா? என்று கவலை கொண்ட அம்மா நான் உறுதியுடன் இருப்பதைப் புரிந்துகொண்டு அப்பாவிற்கும் தைரியமளித்து என் பாதையில், நான் பயணிக்க மனப்பூர்வமான வாழ்த்தை அளித்தார். எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து புறப்பட்டு கனவுகளை மட்டும் கைக்கொண்டு சினிமாவில்  நுழைந்த எனக்கு உளப்பூர்வமான நம்பிக்கையளித்தது என் அம்மாவே.  நாளைய இயக்குனர் இறுதிப்போட்டிக்கு நேரில் வந்திருந்து நான் பரிசு பெற்ற தருணத்தை அம்மா அப்பா கண்டது, அங்கு நான் வாங்கியதை விட ஒப்பற்ற பரிசு!

       நான் சென்னையில் புதிய சூழலை நம்பிக்கையோடு எதிர்கொண்டு கைக்கொண்டதும், அங்கு  பழகிய மனிதர்களிடம் பெற்ற நற்பெயர் அத்துணையும் என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டு வந்ததே என்பதை உணர்ந்திருக்கிறேன்.

       அடுத்த வருடத்திலேயே தங்கை காயத்ரிக்கு மகள் பிறந்தாள். அவளுக்கு ரிதன்யா என்று பெயர் வைத்தோம். பேத்தியை உச்சி முகர்ந்து அம்மா அடைந்த மகிழ்ச்சி அளவற்றது.

        2014ல் நான் எனது முதல் திரைப்படமான ”இன்று நேற்று நாளை  படத்தை தொடங்கி படப்பிடிப்பை முடித்தது என்மீது அம்மா அப்பா வைத்த நம்பிக்கையை முழுமை செய்த திருப்தி எனக்கு இருந்தது.  அம்மாவிற்கும் அது அளப்பரிய மகிழ்ச்சியை கொடுத்திருந்தது. அந்த சமயத்தில் தங்கை இரண்டாவதாக ஆண் குழந்தை பெற்றெடுத்தாள்.  பேரனுக்கு சஸ்வின் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம். அம்மா இன்னும்  மகிழ்ந்திருந்தார்.


       இன்றுநேற்றுநாளை முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்துவிட்டு அம்மா நல்லாருக்குடா என்று சொன்னதே நான் பெற்ற மிகப்பெரிய பேறு!. அன்று அம்மா அப்பா என்மீது வைத்த நம்பிக்கையை முழுமையாக்கியதாக நினைத்தேன். இந்த படத்திற்காக எனை நோக்கி வந்த பாராட்டுக்கள் அத்துணையும் என் அம்மாவை மகிழ்வித்திருக்கும் என்று நான் மகிழ்ந்திருந்தேன்.

       அம்மாவுக்கு இந்த மகிழ்ச்சியெல்லாம் தாண்டி உள்ளூர இருந்த கவலை எனக்கு திருமணம் தாமதமாகிக்கொண்டே இருப்பது பற்றிதான். அப்போது, எனக்கு 31 வயது கடந்துவிட்டது. அம்மா ஓயாது பார்த்த பல வரன்கள் எதுவும் திருப்தியாக அமையவில்லை. கடைசியாக பார்த்த ஒரு வரன் அம்மாவுக்கு முழுக்க திருப்தி.  ஆனால் எனக்கு முழுமனதாக இல்லை.  இந்த விசயத்தில் அம்மாவை என்னால் திருப்தி செய்யவில்லை என்பது எனக்கே ரொம்பவும் வருத்தமாக இருந்தது.  அந்த நிலையில் நான் என் மனதுக்கு பிடித்த பெண்ணாக பிரியங்காவை கண்டேன்.  பிரியங்காவைப் பற்றி அம்மாவிடம் சொல்ல, அவர்களுக்கும் இரட்டிப்பு சந்தோஷம். பிரியங்கா எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் பேசிய தருணமெல்லாம் அத்துணை அழகு.  காதல் திருமணம் இருவீட்டார் சம்மதத்தோடு நிச்சயிக்கப்பட்ட திருமணம் போல கோலாகலமாக, அம்மாபாளையம் அம்மன் திருமண மண்டபத்தில் 29.08.2016ல் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜீ.ராமகிருஷ்ணன், வாசுகி, தங்கவேல் தோழர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  ஆரம்பத்தில் அம்மா கோவிலில் திருமணம் வைக்கலாம் என்றுதான் விரும்பினார்கள்.  அப்போது நான் என் விருப்பத்தை எடுத்துச் சொல்ல, அதற்கு சம்மதித்து சடங்குகள் இல்லாத திருமணமாக நடந்தேற ஒத்துக்கொண்டார்கள். அன்று திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்கள் பலரும் சொன்னது இவ்வளவு கூட்டத்தை பார்த்ததே இல்லை என்பதுதான். அது அத்துணையும் சொந்தங்கள் மட்டுமல்ல அம்மா அப்பா பழகி சேர்த்த நண்பர்கள், தோழர்கள் தாம்.

        2016 அம்மாவிற்கு மூச்சு விட சின்னதாக சிரமம் ஏற்பட்டதால், ராமகிருஷ்ணா மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து பார்த்தோம். அதில் இருதயத்தில் சிறிய பலவீனம் உள்ளதென்று கண்டறியப்பட்டது. உடனே அங்கு அட்மிட் செய்யப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை செய்து முழுவதுமாக தேறினார். அதன் பின்னர் அதிகமாக மாடிப்படி ஏறுவதை தவிர்த்தே வந்தார்.

      

       என் மனைவி பிரியங்கா 2017ல் கருவுற்றாள்.  2018 பிப் 28ம் தேதி கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெண் குழந்தை பிறந்தது.  மகன் வாயிலாக திரும்பவும் பாட்டியானதில் அம்மாவுக்கு அளப்பரிய மகிழ்ச்சி. நறுமுகை என்று அழகுதமிழில் பெயரை நான் சொன்னதும் எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.  எனக்கு பெயர் வைத்த அதே இடத்தில் மகளுக்கும் பெயர் வைக்கலாம் என்று சொன்னேன். குமரானந்தபுரம் காமாட்சியம்மன் கோவிலில் வைத்து குழந்தையின் காதில் அம்மா, அப்பா இருவரும “நறுமுகை... நறுமுகை...  நறுமுகை...“ என்றார்கள். நறுமுகை ஆசிர்வதிக்கப்பட்டாள். நான் மெளனமாக ரசித்துக்கொண்டிருந்தேன்.

      

        2018ல் எனது இரண்டாவது படமாக அயலான் படம் ஆரம்பிக்கப்பட்டதும், அதன் படப்பிடிப்பு துவக்க நிகழ்வு பூஜையில் அம்மா அப்பா கலந்துகொண்டார்கள். பூத்தூவி சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. வேகமாக வளர்ந்துவந்த படப்பிடிப்பு இடையே சிறிய தடை ஏற்பட்டு கொஞ்சம் தாமதம் ஆனது.

        2019ல் எனக்கு படப்பிடிப்பு இருந்ததால் நறுமுகையின் முதல் பிறந்த நாள் நிகழ்வை, சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் வைத்து நடத்தினோம். அம்மா, அப்பா, தங்கை வீட்டினர், மாமனார் என்று சொந்தங்கள் சூழ்ந்த நிகழ்வில்  சிவகார்த்திகேயன், கருணாகரன் உள்ளிட்ட நண்பர்களும் குடும்பத்தோடு கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.        2020ல் படப்பிடிப்பு முடிவடையும் நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வயதானவர்கள் கூடுதல் ஜாக்கிரதையோடு இருக்கவேண்டுமென்பதால் அம்மா, அப்பா மீது கொஞ்சம் பயம் இருந்தது.  நானும் மனைவி, மகளோடு சென்னையில் இருந்து கிளம்பி, திருப்பூருக்கு வந்து அம்மா அப்பாவோடு இருந்துகொண்டேன். இங்கு இருந்த அந்த ஆறுமாத காலம் தாத்தா பாட்டியோடு நறுமுகை விளையாடியதும். நான் வேலைப்பளு இல்லாமல் வீட்டிலேயே அம்மா, அப்பாவோடு பேசி கழித்ததும், இனி திரும்ப வாராத பொன்னான காலங்கள்.  எங்கள் வீட்டில் மாடித்தோட்டம் பயிரிட்டேன்.  காய்கறிகள் விதைத்தேன், அம்மா பூச்செடிகளை நிறைய நட்டுவைத்தார். வித விதமான ரோஜா செடிகளை அம்மா ஆர்வத்தோடு வளர்த்தார்.  அவை இன்றும் தினசரி பறித்தாலும் தீராமல் பூத்துகுலுங்குகிறது.

       எனக்கு நினைவு தெரிந்து, எங்கம்மாவுக்கு பிறந்த நாள் கொண்டாடினதோ வாழ்த்து சொன்னதோ கிடையாது. ஏனென்றால் அவரின் பிறந்த தேதி அவருக்கே தெரியாது. “ஏம்மா சின்ன வயசுலயெல்லாம்  பிறந்த நாள் கொண்டாடலையான்னு?” என்று கேட்டால் “அப்போ அதெல்லாம்   யாரு கொண்டாடினா? என்று சொல்வார்.

       சிறு வயதிலேயே அவர் தன் தாயை இழந்துவிட்டதாலும், ஆளாகும் முன்பே அவரது அப்பாவும் காலமானதாலும், அவர் பிறந்த தேதியை நாங்கள் கேட்டு தெரிந்துகொள்ள, சொல்ல யாரும் இல்லை. பேஸ்புக்கில் அம்மாவுக்கு ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கும் போது, பிறந்த தேதி தேவைப்பட்டது. என்ன போடலாம்? என்று யோசித்து அம்மாவுடன் பேசி பிறந்த வருடம் 1967 என்று கண்டுபிடித்து விட்டோம்.  ஆனால் நாள், மாதம் தெரியவில்லை. அம்மாவின் பிறந்த தேதியை நாங்களே முடிவு செய்யவேண்டியதாய் ஆயிற்று. அதனால், குத்துமதிப்பாக நாள், மாதம் போட்டதுதான் 9 செப்டம்பர் அம்மாவுக்கு பிறந்தநாள் என்று பேஸ்புக் காட்டும் தேதி.

       இடையே ஊரடங்கு சமயத்தில் அம்மா அவரது பால்ய சிநேகிதியுடன் பேசுகையில், அம்மா பிறந்த ஊரான பட்டிமணியகாரம்பாளையத்தில் அவர்கள் ஒன்றாக படிக்கையில் பள்ளியின் ஆசிரியராக இருந்தவர் பழனிச்சாமி.  அவர் அதேபள்ளியில் ஹெட்மாஸ்டர் ஆகி, பின் ஓய்வு பெற்று இப்போது, எங்களுக்கு பக்கத்து ஏரியாவான ஸ்ரீநகரில் தான் இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டார்.  அம்மா அவரை தேடிச் சென்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அம்மா 5ம் வகுப்புவரை அவரிடம் தான் படித்ததை எடுத்துக்கூறி, அவர் ஞாபகத்தை கிளறியதில் அம்மாவின் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்கள் நிச்சயம் பள்ளியில் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், சரியான நேரத்தில் கொரோனா ஊரடங்கு வாய்க்க, பள்ளி திறந்தபின் நிச்சயம் விபரங்களை எடுத்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார். பள்ளி திறப்பிற்கு அம்மாவும் நாங்களும் ஆவலோடு காத்திருந்தோம்.

       ’’அம்மாவின் உண்மையான பிறந்த நாள் பள்ளியின் ஏதோ ஒரு கோப்பின் ஒரு தாளில் பொதிந்திருக்கிறது. அது வெறும் நாட்கள் பற்றிய விபரங்கள் மட்டுமல்ல, அது அவரின் அப்பா அவருக்காக பதிந்து வைத்துவிட்டு போயிருக்கும் சொத்து”  என்று நான் இதை பேஸ்புக்கில் ஒரு பதிவாக எழுதியிருந்தேன். அம்மா அதை அவர் நண்பர்களிடம் சந்தோஷமாக கூறியுள்ளார் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

        2021 ஜனவரி பொங்கலுக்கு மறுநாள் படப்பிடிப்பு இருந்ததால், திருப்பூர் வர முடியவில்லை. எப்போதும் தீபாவளி, பொங்கலுக்கு திருப்பூரில் இருக்கும் எனக்கு இந்த முறை பொங்கலுக்கு ஊருக்கு வரமுடியவில்லை. அம்மா, அப்பா உடன் பேத்தியை வைத்துக்கொண்டு பொங்கல் கொண்டாடமுடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. பொங்கலன்று அம்மா தங்கை வீட்டில் வைத்து பொங்கல் கொண்டாடி அதை போனில் காட்டினார். பார்த்துக்கொண்டோம். நானும், என் வீட்டு மாடியில் பொங்கல் வைத்து அதை அம்மாவுக்கு போட்டோ, வீடியோ எடுத்து அனுப்பினேன் இப்படித்தான் கடந்த பொங்கலை கொண்டாடினோம்.

       பிப்-மார்ச் படப்பிடிப்பை முடித்து டப்பிங் பணிகளை மேற்கொண்டிருந்தேன்.  மார்ச் 6ம் தேதி அம்மாவுக்கு இருமினால் முதுகு வலிக்கிறது இடது கை வரை வலிக்கிறது என்று சொன்னதால், அப்பா அருகே குமரன் மருத்துவமனையில் எப்போதும் வாடிக்கையாக பார்க்கும் புஹாரி டாக்டரிடம் கூட்டிச்சென்று காட்டியிருக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக அம்மாவை மாதா மாதம் பரிசோதனை செய்து பிரசர்க்கு மருந்து கொடுத்துவருபவர் புஹாரி. எனக்கும் அவர் பழக்கமென்பதால் அம்மாவும் அவரை சந்திக்கும்போதெல்லாம் குடும்ப நண்பர் போல தான் பழகுவார்.  அன்று அவர் அம்மாவை பரிசோதித்து பார்த்துவிட்டு ஏற்கனவே ஆஞ்சியோ செய்திருப்பதால் ஒரு ஹார்ட் ஸ்கேன் (இருதய பரிசோதனை) செய்துகொள்ளலாம் என்று கோவையிலுள்ள கிளாரிட்டி ஸ்கேன் செண்டர்க்கு எழுதி கொடுத்துள்ளார். அம்மா இப்போ உடனே டெஸ்ட் எடுக்கணுமா? என்று கேட்டதற்கும் கூட, அப்பா அதெல்லாம் உடனே எடுத்து பார்த்துடலாம் வா என்று தங்கை, மச்சான் மணிகண்டன் அவர்களை கூட்டிக்கொண்டு காரில் கோவை சென்று டெஸ்ட் எடுத்து வந்தார்கள். பின் இரண்டு நாள் புஹாரி லீவில் சென்று விட்டதால், அவருக்கு ரிப்போட்டை வாட்சப்பில் அனுப்பியிருக்கிறார்கள். அவர் ரிப்போர்ட்டை படித்துவிட்டு இருதய செயல்பாடு நன்றாக இருக்கிறது. நான் நேரில் வந்து பார்க்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

        7ம் தேதி நான் அம்மாவுக்கு போன் செய்து பேசும்போது  தங்கை காயத்ரி பேசினார். அம்மாவுக்கு நெஞ்சுக்குள்ள வலிச்சுக்கிட்டே இருக்கு பசியே வரலைனு சொல்லுது, டயர்டா இருக்கு, புஹாரி டாக்டர் வர லேட் ஆகறதால, பக்கத்துல வேற ஹாஸ்பிடல் போலாம் என்றார்.  சரி! நான் புஹாரி கிட்டயே ஆலோசனை கேக்குறேன் என்று சொன்னேன்.  அப்போது தான் காயத்ரி சொன்னார், அம்மா கழுத்துகிட்டயும் நேத்து நைட்ல இருந்து ஒரு சின்ன வீக்கம் வந்திருக்கு, அதயும் கேளு என்றார்.

       புஹாரி டாக்டரிடம் போன்செய்து “நெஞ்சில் வலி குறையவே இல்லை.  கழுத்திலும், நேற்று இரவிலிருந்து சிறிய வீக்கம் இருக்கு” என்று சொல்ல அவர், “ புஸாரி டாக்டரிடம் விஸ்வாஸ் ஸ்கேன்ல ஒரு சி.டி ஸ்கேனும், எம்.ஆர்.ஐ ஸ்கேனும் பண்ணி பார்த்துட்டா கம்ளீட்டா தெரிஞ்சிடும் என்று  சொல்லி அவரே விஸ்வாஸ் லேபுக்கு அழைத்தும் சொல்லிவிட்டார்.  அப்பா, அம்மாவை கூட்டிக்கொண்டு போய் டெஸ்ட் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். விஸ்வாஸ் ஸ்கேன் செண்டர் பின்புறம்தான்  எங்கள் வீடு.  அவர்கள் வீடு செல்வதற்குள் புஹாரி எனக்கு போன்செய்து “ரிப்போர்ட் பார்த்தேன். அம்மாக்கு தைராய்ட்ல கட்டி இருக்கு, அதுபோக அது நுரையீரல்ல ஆங்காங்கே கட்டி பரவியிருக்கற மாதிரி தெரியுது, டெஸ்ட் ரிப்போர்ட்ல செகண்டரிங்க வார்த்தை போட்டிருக்கறாங்க.  அப்படின்னா அது உடம்புல வேற இடத்துல இருந்து பரவுனதுன்னு அர்த்தம். இப்போதைக்கு, அது தைராய்ட்ல இருந்து வந்த மாதிரி தான் தெரியுது.  இத சரியா சொல்லணும்னா, எப்படி சொல்றதுனே தெரிலஎன்று அவர் இழுக்க எனக்கு அடிவயிற்றிலிருந்து புரள ஆரம்பித்துவிட்டது.  பதற்றத்துடன் என்று சொல்லுங்க டாக்டர்கேட்க, “கேன்சர் மாதிரி தான் தெரியுது, இத எப்படி அம்மாகிட்ட சொல்றது? அவங்க அவ்ளோ இயல்பா பழகுறவங்க, நா டாக்டர், அவங்க பேசண்ட் அப்படி இதுவரை அவங்களோட பேசுனதே இல்லை... குடும்ப நண்பராகத்தான் இருந்தேன். எனக்கே இந்த ரிசல்ட் அதிர்ச்சியா இருக்குஎன்று சொன்னார். நான் நிலைகுலைந்து போனேன்.  நான் உடனே கிளம்பி வந்துடட்டுமா?” என்று கேட்க  ஆமாம் நீங்க வந்தா அவங்க இன்னும் தைரியமா இருப்பாங்க என்று சொல்ல உடனே காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டேன்.. அம்மாவிடம், உண்மையைச்  சொல்லாமல் உனக்கு உடம்பு சரியில்லை... அதான் பார்க்க வர்றேன்என்று சொன்னேன். “இப்போ என்ன அவசரம்... டப்பிங் வேலையப் பாரு, முடிச்சுட்டு வா என்றார் அம்மா.  இல்லை, வந்துட்டு ரெண்டு நாள்ல வந்துடறேன் என்று சொன்னேன்.  நான் பேசியதையும், அவசரமாகக் கிளம்பி வருவதையும் வைத்து  அம்மா அப்பாவிடம் அவன் வர்ற வேகத்தப் பார்த்தா டாக்டர் எதோ சொல்லிருக்கார் போல... கேன்சரா இருந்தா ஆப்ரேசன்லாம் பண்ணி செலவு பண்ணிறாதீங்க காப்பாத்த முடியாது என்று சொல்லியிருக்கிறார்.  துக்கத்தை மறைத்துக் கொண்டு அப்பாவும் வாயக்கழுவு... ஏன் இப்படியெல்லாம் பேசற என்று  திட்டியிருக்கிறார்.

       கேன்சர்னு டாக்டர் சொல்லிருக்கார், அத எப்படி குணப்படுத்தறது? எங்க போலாம்? என்று  நண்பர்களிடம் போனில் பேசிக்கொண்டே காரில் வந்துகொண்டிருக்கிறேன். சிவகார்த்திகேயன் பேசும்போது, செலவ பத்தி கவலைப்படாதீங்க பிரதர், அம்மாவ அப்போலோ கூட்டிட்டு வந்துடுங்க என்று சொன்னார்.  7ம் தேதி நள்ளிரவு திருப்பூர் வந்து சேர்ந்து காலை முதல்வேலையாக புஹாரியிடம் பேச அவர் புற்றுநோய் கதிரியக்க மருத்துவர் சுரேஷ்குமார் அவரை சந்திக்க சொன்னார். சுரேஷ்குமார் டாக்டர் அவர் அம்மாவிற்கும் இதே போல் தைராய்டு கேன்சர் இருந்து அவர் குணப்படுத்தியிருக்கிறேன் என்றது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வரவழைத்தது.  அவரிடம் பேசி அன்று மதியம் 12 மணிக்கு அவரை சென்று சந்தித்தோம். அம்மாவையும் கூட்டிப்போனோம். உடன் தங்கை மனைவி மச்சான் எல்லோரும் வந்தார்கள்.

       ரிப்போர்ட்டுகளை பார்த்த சுரேஷ்குமார் என்னிடம் மட்டும் முதலில் பேசினார். “இது தைராய்ட் கேன்சர், நுரையீரல்க்கும் பரவியிருக்கு ஆன தைராய்டு கேன்சருக்கு நாம ரொம்ப பயப்பட வேண்டாம். தைராய்டு கேன்சரை முழுக்க குணப்படுத்திவிடலாம் என்று சொன்னார். அவர் கல்லூரியில் படித்த கேன்சர் பாடத்திலேயே கடவுளே உங்க கிட்ட வந்து உனக்கு ஒரு கேன்சர் கொடுத்துதான் ஆவேன், என்ன  கேன்சர் வேணும்னு கேட்டா நீங்க தைரியமா தைராய்டு கேன்சர வாங்கிக்கலாம், ஏன்னா அத குணப்படுத்திவிடலாம் அப்படின்னு இருக்கும்னு சொன்னார்.  மெல்ல ஒரு நம்பிக்கை பிறந்தது. அம்மாகிட்ட கேன்சர்ங்கற வார்த்தைய சொல்லி அவங்கள பயமுறுத்த வேண்டாம், கட்டி அப்படின்னு மட்டும் சொன்னாலே போதும் நீங்க என்ன நினைக்கறீங்கனு கேட்டார்? சரிங்கன்னு சொன்னேன்

அம்மா, தங்கை எல்லோரையும் அழைத்து பேசினார்.  அம்மாவை பரிசோதித்து பார்த்தார். பயப்படாதீங்க! தைய்ராடுல சின்ன கட்டிதான் சரி பண்ணிடலாம்னு சொன்னார்.  அடுத்து நீங்க பண்ண வேண்டியது தைராய்டு கட்டியை ஊசி மூலமா பயாப்சி டெஸ்ட் பண்ணனும், அது என்ன வகைனு பார்த்துட்டு தான் அதுக்கு ட்ரீட்மெண்ட் பண்ண முடியும்னு சொன்னார்.

       பாப்பிலரி ஆர்சினோமா வகை கட்டியா இருந்தா, அதுக்கு ரேடியோட்டேடு அயோடின்னு ஒரு சிகிச்சை இருக்கு.  அயோடினை ரேடியேசன் பண்ணி ஜூஸ் மாதிரி குடுப்பாங்க. குடிச்சிக்கிட்டா அது உடம்பில இருக்குற தைராய்டு கட்டிகள் மேல படிஞ்சு அத கரைச்சிரும்னு சொன்னார். குடுக்கற மருந்து நுரையீரலுக்கு அதிகமா போகனும்னா கழுத்துல இருக்கற கட்டியை ஆபரேசன் பண்ணி எடுத்துடனும் இல்லைனா மருந்த கழுத்துல இருக்கற கட்டியே எடுத்துக்கும்னு சொன்னார். ஆனா இதெல்லாம் பயாப்சி ரிசல்டு வந்ததும் நா தெளிவா சொல்றேன், தைராய்டு புற்றுநோய்ல ஆபத்தானா ஒரு வகை இருக்கு அதுக்கு பேரு அனபிளாஸ்டிக் ஆர்சினோமா அது குணப்படுத்தறது ரொம்ப கஷ்டம் அந்த வகையா இல்லாம இருக்கனும்னு சொன்னார். எனக்கு ரொம்பவும் பயமா இருந்தது, அந்தமாதிரி மோசமான வகையா இருந்திடக் கூடாதுன்னு மனசுல நினைச்சுக்கிட்டு பயாப்சிக்கு போனோம். செரிப் காலனில இருக்கற யுனைடேட் ஸ்கேன் செண்டர்ல பயாப்சி குடுத்தோம்.  ரிசல்ட் வர இரண்டு நாள் ஆகும்னு சொன்னாங்க வீட்டுக்கு வந்துட்டோம்.

       மறுநாள் 9ம் தேதி அம்மா ரொம்பவும் டயர்டாக தெரிந்தார். பசியில்லாமல் சாப்பிடவும்  விரும்பவில்லை. அன்றிரவு தங்கையிடம் வீட்டிற்குள்ளேயே இருந்த அம்மாக்கும் கஷ்டமா இருக்கும் வெளிய போலாமா? என்றேன். எங்கே போலாம்? என்று கேட்டாள். குலதெய்வ கோவிலுக்கு போலாமா? என்று கேட்டேன். போலாம் அம்மா படிச்ச ஸ்கூலுக்கு கூட போலாம் என்று சொன்னாள். சரி மொதல்ல கோவிலுக்கு போவோம்னு  10ம் தேதி காலை அம்மா, அப்பா, நான், மனைவி, தங்கை, மச்சான், குழந்தைகள் என எல்லோருமாக சென்றோம். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு அமர்ந்திருக்கும் போது, சுரேஷ்குமார் டாக்டர் போனில் அழைத்தார்.  ரிசல்டு வந்திருச்சு, அதுல ஆபத்தில்லாத வகையான பாப்பிலரி ஆர்சினோமா வகை கட்டிதான் வந்திருக்கு. அதனால கவலையில்லைனு சொன்னார்.  அப்போது அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை. டாக்டரிடம் பேசியதில்  தைராய்ட் ஆப்ரேசன் செய்துவிட்டு 15 நாட்கள் கழித்து ரேடியேக்டிவ் அயோடின் கொடுத்தால் முழுக்க குணமாகிவிடுவார் என்று சொன்னார். ஆபரேசன் முடித்து 15 நாள் கழித்து அடுத்த சிகிச்சை எடுக்கும் வரை நுரையீரலில் உள்ள கட்டி வளர்ந்துவிடாதா? என்று என் சந்தேகத்தை கேட்டேன். இந்த வகை கட்டி அவ்வளவு வேகமாக வளராது, சில பல மாதங்கள் ஆகும். நாம்தாம் 15 நாட்களிலேயே அடுத்த சிகிச்சை எடுத்துவிடுவோமே, கட்டியின்  குணமாகும் தன்மையை பொறுத்து அடுத்து ஆறுமாதம் கழித்து திரும்ப, ஒரு முறை ரேடியேக்டிவ் அயோடின் கொடுக்கவேண்டி வரும் என்றார்.  ரொம்பவும் நம்பிக்கையானோம்.  

       காயத்ரி அம்மா ஊருக்கும் ஸ்கூலுக்கு போலாம்னு  சொன்னாள். அங்கிருந்து 40 நிமிடம் ஆகும். அம்மாவும் ஸ்கூல்ல இருக்கற டீச்சர்வரை பேசி போலாம் என்ற முடிவுக்கு வந்து பட்டிமணியகாரம்பாளையம் பள்ளிக்கூடம் நோக்கி போனோம். போகும் வழியில் நம்பியூரில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்

       பள்ளிக்கூடம் சென்றடைந்து ஆசிரியர்களிடம்  பேசி, அம்மா அந்த கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அம்மாவின் பிறந்த நாளாக பள்ளியில் பதிந்த தேதி 04.05.1967 என்பதை அறிந்துகொண்டோம். பொதுவாக அப்போது பள்ளியில் சேர்த்த வசதியாக எல்லோருமே 05வது மாதத்தை குறித்துக்கொள்வார்கள் என்று சொன்னார்கள். இருந்தாலும் அபிசியலாக அம்மாவின் பிறந்த தேதியை கண்டுகொண்டோம்.  பேஸ்புக்கில் இதை மாற்றிவிடலாம் என்று பேசிக்கொண்டோம்.

அப்படியே, அம்மா பிறந்து வளர்ந்த வீட்டிற்கு போனோம் அந்த வீடு இன்னமும் அப்படியே இருக்கிறது. அந்த வீட்டை அம்மா, அப்பா இருவரும் தான் விற்றிருக்கிறார்கள். அதை அப்போது வாங்கியவர்கள்தான் இன்னமும் அதில் குடியிருக்கிறார்கள். அவர்களோடு பேசிக்கொண்டு நினைவுகளை பகிர்ந்துகொண்டு. அருகிலிருக்கும் தெரிந்தவர்களிடமெல்லாம் பேசிவிட்டு வீடு திரும்பினோம். காரை நான் ஓட்டிக்கொண்டு வந்தேன் அப்போது அம்மா என்னிடம்வீட்டிலிருந்து மணியகாரம்பாளையம் வர எவ்ளோ நேரம் ஆகும்?” என்று கேட்டார்கள்முக்கால் மணி நேரத்துல வந்துடலாம்மாஎன்று சொன்னேன். யோசித்தவர்இந்த முக்கால்மணிநேரத்த கடந்து இங்க வர எனக்கு முப்பது வருசம் ஆகிடுச்சுஎன்றார்கள். அந்த வார்த்தையை என்னால் உடனே கடந்துவிட முடியவில்லை யோசித்தபடியே வந்தேன்.

அப்போது, சுரேஸ்குமார் டாக்டர் அழைத்து பேசினார். அவர் மேற்கொண்டு அறுவை சிகிச்சை பற்றி பேச, டாக்டர் மோகன்குமார் அவர்களை சந்திக்க சொன்னார். அன்று மாலையே அம்மாவை அழைத்துக்கொண்டு டாக்டரை சந்தித்தோம். அவர் பிஎஸ்ஜி மருத்துவமனையில் பணிபுரியும் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர். அடையார் கேன்சர் இன்ஸ்யூட்டில் பணிபுரிந்தவர்.  திருப்பூர் வந்திருந்தார்.

       அவர் அம்மாவை பரிசோதித்துவிட்டு, டெஸ்ட் ரிசல்டுகளை பார்த்துவிட்டு பயப்பட ஒன்றுமில்லை, தைராய்டு கட்டியை முதலில் அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது தான் அடுத்த கட்டம், அதற்கு பின் ரேடியேக்டிவ் அயோடின் கொடுத்து குணமாக்கிவிடலாம் என்றார்.  அறுவை சிகிச்சை எங்கு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம், அடுத்த சிகிச்சையான ரேடியோக்டிவ் அயோடின் சிகிச்சை கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை அல்லது ராயல் கேர் அங்கு செய்துகொள்ளலாம் என்று சொன்னார்.  இந்த பாப்பிலரி ஆர்சினோமா வகை ஆபத்தில்லாதது இதே அனபிளாஸ்டிக் ஆர்சினோமா வகையாக இருந்தால் நான் உங்களை சிகிச்சை எதும் தேவையில்லை, வீட்டிற்கு அழைத்துசென்றுவிடுங்கள் இரண்டு வாரம் தான் இருப்பார் என்று சொல்லியிருப்பேன் என்று சொன்னார். நல்லவேளை நாம் அந்த வகைக்குள் போகவில்லை என்று நினைத்துக்கொண்டோம்.

       மறுநாள் புஹாரியிடம் எல்லா விபரங்களையும் கலந்து ஆலோசித்துவிட்டு இன்னொரு ஒப்பீனியன் வாங்கனும் என்று சொன்னேன் அவர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க டாக்டர். மதுசாய்ராம் அவர்களை சந்திக்க சொன்னார்.  11ம் தேதி அவரை சந்தித்தோம்.  அவரும் அம்மாவை பரிசோதித்துவிட்டு, டெஸ்ட் ரிசல்டுகளை பார்த்துவிட்டு , இது எல்.கே.ஜி லெவல் கேஸ் என்று பைலை மடித்து தூக்கி வைத்தார்.  சுலபமாக, குணமாகக் கூடிய கேன்சர் வகை இது என்று மிகவும் நம்பிக்கையோடு சொன்னது எல்லோருக்குமே ரொம்பவும் தைரியத்தை கொடுத்தது.  இதற்கு மேலும் அம்மாவை அழைத்துகொண்டு ஒவ்வொரு மருத்துவராக காட்டவேண்டுமா? என்று புஹாரியிடம் கேட்டேன் அவரும் தேவையில்லை, அங்கேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்றார்.  அறுவை சிகிச்சையும்  மேற்கொண்டு அடுத்த சிகிச்சையும் ஒரே மருத்துவமனையிலேயே எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து மறுநாள் ஆபரேசன் டாக்டர் திவாகர் அவர்களை சந்தித்து, அம்மாவை பரிசோதித்து பார்த்துவிட்டு  ஆபரேசன் பண்ணி கட்டிய எடுத்துடலாம் கவலைப்படவேண்டாம் என்றார். மறுநாளே ஆபரேசன் செய்துவிடலாம் என்று மருத்துவமனையில் அட்மிட் ஆனோம்.

        13ம் தேதி காலை 8.30க்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.  திவாகர் டாக்டர் ஆபரேசன் செய்து எடுத்த கட்டிகளை காண்பித்தார். அவற்றை பயாப்சி டெஸ்ட் செய்து ரிசல்ட் வர சில நாட்கள் ஆகும் என்றார். 11 மணிக்கு அறைக்கு கூட்டிவந்தார்கள்.  ஆபரேசன் முடிந்து அம்மா நலமாக இருந்தார். அறுவைசிகிச்சை செய்த கட்டியின் பயாப்சியும், முன்பு நாம் செய்த ஊசிமூலமான பயாப்சியும் ஒன்றாகத்தானே இருக்கும் என்று டாக்டரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் 98% ரிசல்ட் ஒன்றாகத்தான் இருக்கும் ஆனாலும் அறுவைசிகிச்சை செய்து எடுத்த கட்டியை டெஸ்ட் செய்துவரும் ரிசல்ட் தான் முழுமையானது என்று சொன்னார்.

       மறுநாள் 14ம் தேதி வராண்டாவில் நடக்குமளவு அம்மா தயாரானதை பார்த்துவிட்டு, டாக்டர் நாளைக்கே டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம்மா என்று நம்பிக்கை சொல்லிவிட்டு சென்றார்.  அனால் திடீரென்று அன்று இரவு இருமலும், லேசான காய்ச்சலும் நெஞ்சில் வலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. ஆக்சிஜன் வைக்கப்பட்டு மூச்சு கொஞ்சம் சீரானது.   வலது இடுப்பிலிருந்து கால் வரை அம்மாவால் அசைக்க வேறு முடியவில்லை. பரிசோதனை செய்த டாக்டர் லேசான ஸ்ட்ரோக் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டு அதில் மூளையில் சிறிய சிறிய இரத்த தெறிப்புகள் ஏற்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதற்கான மருத்துகள் கொடுக்கப்பட்டு, அம்மாவால் மெல்ல காலை நகர்த்த முடிந்தது. பிசியோதெரபி செய்ய மெல்ல சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.  ஆக்சிஜன் உதவியோடு மூச்சு விட்டுக்கொண்டிருப்பதை சரி செய்து சீராக்கும் முயற்சியில் இருந்தார்கள். முன்னேற்றம் ஏற்படாமல் இருந்ததால் மறுநாள் ஐ.சி.யூவில் வைத்து கூடுதல் கண்காணிப்போடு பார்த்து மூச்சு சீரானதும், ரூம்க்கு வந்துவிடலாம் என்று சொன்னார்கள். 

       மறுநாள் சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது.  அதில் 7ம் தேதி எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் 2 செமீ இருந்த நுரையீரல் கட்டிகள் 12 செமீ அளவு வேகமாக வளர்ந்திருப்பது தெரிந்தது.  அதைத் தொடர்ந்து தைராய்டில் இருந்து அகற்றப்பட்ட கட்டியின் பயாப்சி ரிசல்ட் வந்திருந்தது. அதில் முன்னமே சொன்னது போல ஆபத்தில்லாத பாப்பிலரி ஆர்சனோமோவோடு ஆபத்தான அனபிளாஸ்டிக் வகை கேன்சரும் இருப்பதாக சொன்னார்கள். அந்த வகை கேன்சரை குணப்படுத்த, முன்பு சொன்ன அயோடின் ட்ரீட்மெண்ட் வேலை செய்யாது என்று சொன்னார்கள். உடனே கீமோ கொடுத்து கட்டுப்படுத்த முயற்சிப்போம். ஆனால், அதுவும் வேலை செய்ய குறைந்த வாய்ப்புகளே உள்ளது என்றும் சொன்னார்கள். டாக்டர் இதையெல்லாம் சொல்ல சொல்ல கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்! என்று மட்டும்தான் சொல்ல முடிந்தது. டாக்டர் குழு எப்படியும் உங்களோட சில மாதங்கள் இருக்க வைக்கிறோம் என்று தான் சொன்னார்கள். ஆனால், அவர்களால் ஐ.சி.யூ விட்டு கூட வெளியே கொண்டுவர முடியவில்லை.

       கீமோ கொடுக்கப்பட்டு 48 மணி நேரம் ஆனது பெரிதாக முன்னேற்றமில்லை, நுரையீரல் முழுக்கவே ரொம்பவும் வேகமாக அனபிளாஸ்டிக் கேன்சர் பரவிவிட்டது என்று சொன்னார்கள்.  அம்மாவால் மூச்சு விட முடியவில்லை, அந்த நிலையிலும் நாங்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று அம்மாவை பார்த்து வெற்று நம்பிக்கையை சொல்லிக்கொண்டே வந்தோம்.  அம்மா நம்பிக்கையோடு மூச்சைப் பிடித்து வைத்திருந்தார்.  மூச்சுவிட கஷ்டமா இருக்கு என்பதை சொல்லிகொண்டே இருப்பார். படுத்தே இருப்பதால் கால்கள் வலிக்கும்.  அம்மாவை பார்க்கும்போதெல்லாம் மாறி மாறி கால்களை அமுக்கி விட்டுக்கொண்டு வருவோம்.  உள்ளே  அம்மா முன்பு அழுதுவிடக்கூடாது என்று அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு வெளியே வந்து கதறியழுதோம்.  ஐசியூவில் இருந்த 5 நாட்களும் இதுவே தொடர்ந்தது. 10  நாட்களுக்குள் வாழ்க்கை தலைகீழாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை.  நடப்பவற்றிற்க்கு என்ன ரியாக்ட் செய்வதென்றே தெரியாமல் நிலைகுலைந்து கிடந்தோம். ஐசியூ முன்பு காயத்ரியும், பிரியாவும் நள்ளிரவானாலும் காத்து கிடந்தார்கள். செக்யூரிட்டியிடம் கேட்டுக் கேட்டு அம்மா எப்படி இருக்கிறார்கள்? என்று தெரிந்துகொள்வார்கள். தினசரி ஐசியூவில் பார்வை நேரம் வரும்போது கல்யாணி அட்டெண்டெர்... அப்படின்னு கூப்பிடும் போதெல்லாம் பதற்றம் சூழ்ந்துகொள்ளும். அழாமல் உள்ளே சென்று வர தயாராவோம். மிகக்கொடுமை! இந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது. அம்மாவின் இந்த நிலை பார்த்து, அப்பா உள்ளூர உடைந்து போனார். ஆனாலும் எங்களுக்காக திடமாக இருந்தார்.

       அம்மாவை முன்பு தொடுசிகிச்சைக்கு கோவையில் தெரசா அவர்களிடம் கூட்டிச்செல்வேன்.  ஐசியூவில் நான் அம்மாவிடம் பேசுகையில் தெரசா வந்து டச் பண்ணுனா சரியாகிடும் என்று நம்பிக்கையோடு சொன்னார்கள்.  தெரசாவிடம் நிலமையை எடுத்து கூறி அம்மாவை வந்து பார்த்து கைகளை தொட்டு அம்மாவிற்கு நம்பிக்கை ஏற்படுத்திச் சென்றார்கள்.  அது பலனளிக்காது என்று தெரிந்தும் அம்மாவின் நம்பிக்கைக்காக செய்தேன். அம்மா உடல்நிலை சரியாகி எங்களோடு வாழ்வோம் என்று இறுதிவரை  நம்பினார்கள்.  ஆனால் அவரை காப்பாற்ற முடியாது என்று தெரிந்த எங்களால், அவர்களிடம் சொல்ல முடியவில்லை.

        10ம் தேதி அம்மாவை அழைத்துக்கொண்டு குலதெய்வம் கோவிலுக்கும், அவர் பிறந்த ஊருக்கும், படித்த பள்ளிக்கும் சென்று வந்ததே அவரின் கடைசிப்பயணமாக ஆகும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. 04.05.67 என்று அங்கு தெரிந்து கொண்ட அவர் பிறந்தநாளை கொண்டாட, அந்த நாள் வரும் வரை கூட அம்மா நம்மோடு இருக்க மாட்டார்கள் என்று அப்போது தெரியவில்லை.  அவரைக் குணப்படுத்த எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.  அம்மா ரொம்ப ஆக்டிவாக இருப்பார்கள், தைய்ராய்டில் கேன்சர் கட்டி வளர்ந்ததும், நுரையீரலில் பரவும் வரையும் எந்த அறிகுறியும் அவர்களிடத்தில் காட்டவே இல்லை. இப்படியொரு கேன்சர் அம்மாவிற்கு வருமென்று, அவரை 10 நாள் முன்பு அவரை பார்த்தவர்கள் கூட நம்பியிருக்க மாட்டார்கள். 54வயது ரொம்பவும் குறைவு. நிச்சயம் அவர் எங்களோடு இன்னும் நீண்டகாலம் இருந்திருக்க வேண்டியவர். இந்த குடும்பத்தை முன்நின்று வழிநடத்தவேண்டியவர். எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்து வந்தவர், இனிவரும் காலத்தில் அவர் நிம்மதியாக என்வாழ்வின் முன்னேற்றத்தை பார்த்து மகிழ்ந்திருக்க கூடிய காலம். அந்த காலத்தில் அவரை என்னோடு வைத்து பார்த்துக்கொள்ளும் வாய்ப்பை காலம் வழங்கவில்லை.

        20ம் தேதி மெல்ல நினைவு குறைந்து கொண்டே வந்து அன்று இரவு 11.30க்கு  எங்களை விட்டு மறைந்தார்கள்.  உயிரும் உடலும் தான் எங்களை விட்டு நீங்கியிருக்குமே தவிர, அவர் எங்கள் மீது வைத்திருந்த அன்பும், பாசமும் எங்கள் உயிர்நீங்கும் வரை நினைவிருக்கும். நிச்சயம் அவர் ஆன்மா எங்களை வழிநடத்தும். அளவுகடந்த சகிப்புத்தன்மையோடு அன்பை வாரி வழங்கும் ஒரே ஜீவன் அம்மா மட்டுமே. அவர் இடத்திற்கு அவர் மட்டுமே! அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை அவர் நினைவுகளால் நிரப்பிவைக்கிறேன். காலத்திற்கும் இனி அது ஒன்றே கூட வரும்.

அவர் வாழ்ந்த வாழ்வு எனக்கு விட்டு சென்றிருக்கும் அர்த்தத்தை ஆழமாக உணர தொடங்கியிருக்கிறேன். வாழ்வின் இக்கட்டான நேரத்தில் முடிவெடுப்பதில் எவ்வளவு முன்னோக்கி இருக்கிறோமோ அந்த அளவு வாழ்வு வேறு திசையில் மாறும் என்பது அம்மாவின் வாழ்வு எனக்கு உணர்த்துகிறது. நிச்சயம் உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன் அம்மா!

 


கருத்துகள்

 1. Anna my condolences.. with great power comes great responsibility.. i wish you all success and good health. Also with your moms blessing for sure u wil achieve great heights and accomplishments.. ungal manam pol vaazhkai amaya vaazhthukkal.. looking forward for more stories from you

  பதிலளிநீக்கு
 2. உங்கள் வாழ்க்கை கண் முன்னே வந்து செல்கிறது. அம்மா யாராலும் தர முடியாத பொக்கிஷம்...

  பதிலளிநீக்கு
 3. அண்ணா... என் அம்மாவுக்கும் இதே போலதான்...2019 ல Breast ல இருந்தத Surgery பண்ணி, 8 chemo செய்து... மீண்டும் ஒரு Surgery செய்து பிறகு Radiation செய்து... நல்ல நிலையில் தான் இருந்தார்.. திடீரென்று அவருக்கு கால் வலி, இடுப்பு வலி அதிகமாகவே நாங்கள் 2 வாரங்களுக்கு முன்பு பார்த்த MRI Scan ல பரவியது என்று தெரியவந்தது... தற்போது மூளையில் சிறு சிறு கட்டிகள்.. இதனால் எப்பவேனாலும் அவுங்களுக்கு Stroke வரும்னு சொன்னாங்க... இத சரி செய்ய Radiation செய்யனும்னு சொன்னாங்க... இப்போ அதையும் செய்து முடித்தேன்... அடுத்து மீண்டும் Chemo செய்தால் இருக்கிற வாழ்க்கைய கொஞ்சம் கூட்டலாம்னு சொல்றாங்க... என்னால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறேன்... அவர் வலியினால் அவதிபடுவதை என்னாலும் என் அப்பாவினாலும் பார்க்க முடியவில்லை... அம்மாவுக்கு இப்படி இருக்குனு சொல்லல.. அப்பாவுக்கும் சொல்லல... யாருக்கும் இதுமாதிரி வரக்கூடாதுன்னு நினைப்பேன்... அவங்க முன்னாடி அழமாட்டேன்...இவ்ளோ நாட்கள் அவிங்க ஆயுள் நீடித்து குடுத்தது கர்த்தர் கிருபைனு தான் சொல்லுவேன்... இந்த CANCER என்ற கொடிய வியாதிக்கு ஏன் இன்னும் தீர்வு செய்யவில்லையே என்று நினைக்கும்போது... 😭😭😭

  Manoj PG
  Erode
  manojcivil@hotmail.com

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்