லீவு

திகாலை நேரத்து இளஞ்சூரியன். தளிர்விடும் எழுமிச்சைசெடியின் இலைவழி சொட்டும் நீரில் மினுமினுத்தது.
செல்வம் அதற்குள்ளாகவே குளித்து ரெடியாகிவிட்டான். தேங்காய் எண்ணைபாட்டிலை குப்புறகவிழ்த்து தட்டி உள்ளங்கை பிசுபிசுப்பை தலையில் தேய்த்துக்கொண்டான்.பழுப்பேறிய கண்ணாடியில் அவன் முகம் பிரகாசமாய் மின்னியது.அவன் மனதுக்குள் ஒரே சிந்தனை.
ஒரு மாதமகவே பள்ளிக்கூடலீவு விட்டு பசங்க எல்லாம் மைதானத்துல விளையாட ஆரம்பிச்சுட்டனுக, தானும் அவங்ககூட வெளையாடனும்னு செல்வத்துக்கு கொள்ளைஆசை ஆனா ஒருமாசமா ஒருநாள்கூட லீவுவிடாம வேலை.எப்ப லீவு விடுவாங்களே, ஓடிப்போய் ஆசையா செம்மண்ல பொரண்டு விளையாடனும், லீவு முடுஞ்சா பசங்க எல்லாம் ஸ்கூலுக்கு ஓடிருவங்க. தலைவாரிய சீப்பை ஜன்னலிடுக்கில் சொருகிவிட்டு,சோத்துக்கூடையோடு வெளியேவந்தான்.

பொடக்காலியில் குளிக்கும் சத்தம் சோப்பு நுரையோடு வெளியேருகிறது.
வெளிவந்த செல்வம் பாசி பிடித்த சிமெண்ட்தொட்டியின் அடியில் ஏதோ துலாவுகிறான், அவன் தேடியது அகப்படக்காணேம் குழப்பமுற்றவனாய் “யம்மா.. இங்க தொட்டிக்கடிய வெச்சுருந்த என்னோட பந்த காணேம் அத பாத்தியா?”
”வேலைக்கு போறவனுக்கு எதுக்குடா பந்து” பொடக்காலிக்குள் இருந்து குரல்.
”இல்லமா சும்மாதா..”
“அது ஜன்னல்மேல இருக்கற போசிக்குள்ள இருக்கும் பாரு”
ஆவல் மேலிட ஓடிச்சென்று பந்தை எடுத்து கூடைக்குள் போட்டுக்கொள்கிறான்.
“மா போய்ட்டு வறேன்”

கூடையின் காதுகளை வலதுகையில் பிடித்து ஆட்டியபடியே சாலையோரமாய் செல்கிறான்.
மைதானத்தை நெருங்குவதற்குள்ளாகவே வெளையாட்டுச்சத்தம் “ஓ”வென எதிரொலிக்கிறது.
அந்த மைதானத்தின் சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாதவாறு சாப்பாட்டுக்கூடையோடு அங்கு நின்று பார்த்துக்கொண்டிருக்கிறான். கும்பலாய் அங்கங்கு கிரிக்கெட் விளையாட்டு நடக்கிறது. மட்டையால் பலத்த அடிவாங்கிய பந்து ஒன்று கதறியவாறு அவன் காலடிவந்து விழுகிறது. பந்தை கையிலெடுத்துப்பார்த்து தூக்கி எறிகிறான்.கூட்டத்திலிருந்து ஒருவன் “டேய் செல்வா வெளையாடவரியா ஒரு ஆள் பத்தல” என்கிறான்
இவன்பதிலை எதிர்நோக்கி பார்ப்பவன் “என்னடா வர்ரயா?” என்கிறான்
செல்வம் தலையை மட்டும் இடம்,வலமாக ஆட்டியவாறு தலைகவிழ்ந்து அங்கிருந்து நகர்கிறான். சற்று தூரம் செல்பவன்
கூடையிலிருந்த பந்தை எடுத்து தரையில் தட்டியவாறு செல்கிறான்.

கம்பெனிக்குள் நுழைந்ததும் சாப்பாட்டுக்கூடையில் பந்தை வைத்தான். “இங்கு குழந்தைத்தொழிலாளர்கள் பணியில் இல்லை” என்ற வாசகம் சுண்ணாம்பு பூச்சுக்குள் மறைந்திருந்தது. எல்லோருக்கும் முன்னதாகவே வந்துவிடுவான், கம்பெனியை கூட்டி சுத்தம் செய்தான், அதற்கு சம்பளத்தில் 50ரூபாய் சேரும்.
கூட்டி வழித்த குப்பைகளை கொட்டிவிட்டு நிமிர்வதற்குள் வேலையாட்கள்வரத்தொடங்கிவிட்டார்கள். வேலை ஆரம்பித்துவிட்டது.
ஓயாத இயந்திரஇரைச்சல். பிராணவாயுவோடு பஞ்சுதூசும் பாதியளவு கலந்த்திருக்கிறது. அது ஒரு உள்நாட்டிற்கு தேவையான ஜட்டி,பனியன்களை உற்பத்தி செய்யும் கம்பெனி. வருடம் முழுவதும் வேலை.நொடியும்பரபரப்பு.நோம்பிக்கு மட்டுமே லீவு கிடைக்கும்.செல்வத்தைபோல நான்கு பேர் அங்கு வேலைசெய்கிறார்கள் அவர்களில் இவன்மட்டுமே இளையவன். மதியத்தை நெருங்குவதற்குள் டீ வாங்கிவற இரண்டுமுறை அனுப்பப்பட்டான்.

சாப்பாட்டு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. செல்வத்துக்கு வேலையில் நாட்டமில்லை சிந்தனை முழுதும் மைதானத்தில் புரண்டுகொண்டிருந்தது. தைத்துபோடும் பனியனை விரித்து அடுக்குவதும்,அதை சைஸ்வாரியாக தனித்தனியாய் கட்டிவைப்பதும் அவன் வேலை. உடனுக்குடன் செய்யவேண்டிய வேலை கொஞ்சம் அசந்தாலும் தைத்துபோடும் பனியன் ”ஸ்டாக்” ஆகி மலைபோல் குவிந்துவிடும், அப்புறம் ”கான்ரேட்”காரனின் வசவை வாங்கிகட்டிக்கொண்டு சாப்பாட்டு நேரத்தையும் இழக்கவேண்டிவரும்.


செல்வத்தின் முன்னால் பனியன்கள் தேங்க ஆரம்பித்தன. ஒரு சுரத்தையில்லாமல் இருந்தான். அவனருகில் அடுக்கும் ஆனந்து செல்வத்தை பார்த்தவாறு “டேய் என்னடா இத்தனை பீச ஸ்டாக் போட்ட?” என்றான்
செல்வம் தான் ’நடந்துவந்தகதையை’ அவனிடம் கூற அவன் பெரியமனுசனைப்போல “ஆமான்டா நானும் எங்க அத்தை வீட்டுக்குபோய் ஆத்துல குளிக்கனும்னு போன நோம்பில இருந்துபாக்கறேன் போகவேமுடிலடா ஒருநாள் லீவு கெடைச்சா போதும் நானும்தான் பாத்துட்டே இருக்கேன்” என்று சொல்லிமுடிக்க செல்வம் தன் சோப்பிலிருந்து ஆரஞ்சுமுட்டாயை அவனுக்கு கொடுக்கிரான்,சிரித்தாற்போல் வாங்கி வாயிலிட்டுக்கொள்பவன் செல்வத்தின் ஸ்டாக்குகளை கடகடவென அடுக்கிதருகிறான்.

வேலை அப்படியே தொடர்ந்துகொண்டிருக்க,அப்போதுவந்த ஒரு டெலிபோனால் திடீரென கம்பெனி பரபரப்புக்குள்ளாகிறது.வேலை நிறுத்தப்படுகிறது, வேலை செய்பவர்கள் ஆளாளுக்கு ஏதோ பேசிக்கொள்கிறார்கள். பேச்சின் ஊடாக எல்லோரது பார்வையும் செல்வத்தின் மேல் நிலைகொள்கிறது. அமர்ந்திருக்கும் செல்வம் தலையை இருபுறமும் திருப்பி என்னவென்று அறிய,ஆர்வம் மேலிட பார்க்கிறான்.பக்கத்திலிருக்கும் ஆனந்திடம் கேட்க “செக்கிங்கு ஆபீஸர் வராங்க்ளாமாடா..வந்தாங்கன்னா வேலைசெய்யற சின்னப்பசங்கள புடுச்சுட்டு போய்ருவாங்கடா!” என்கிறான்
செல்வத்துக்கு படபடப்பு ஏற்பட ஆனந்தை பார்க்கிறான், “பயப்படாதடா..எனக்கு இப்ப பதினைஞ்சு வயசுக்கு மேல ஆச்சு நா சின்னப்பயன்ல வேலைசெய்யறப்ப இதேமாதிரிதான் ஒருக்கா செக்கிங்கு வந்தாங்க அபோ ஓனர் எனக்கு லிவு குடுத்து பின் கேட்டு வழியாதாட்டி வீட்டுட்டாரு இப்ப பாரு உன்னைய போக சொல்லீருவாரு” என்கிறான். அவன் கடைசியாக சொன்ன வார்த்தைதான் செல்வத்துக்கு சந்தோசத்தை கொடுத்தது.

செல்வத்துக்கு கற்பனை பலவண்ணங்களில் பூக்க ஆரம்பித்தது, அவன் மனம் மைதானத்தின் புழுதிக்குள் புரள ஆரம்பித்தது.கால்கள் நிலைகொள்ள மறுத்தன, மனப்பரபரப்பு அதிகமாகியது. கான்ராக்ட்காரன் கூப்பிட்டதுகூட அவன் காதில் விழவில்லை. ஆனந்து அவனை உலுக்கியதும்தான் சுய நினைவுக்கு வந்தான். “டேய் செல்வம் இங்க எந்துருச்சு வாடா!” என்ற கான்ராக்ட்காரனின் குரல் வழக்கத்துக்குமாறாக சந்தோசத்தை கொடுத்தது.

எழுந்துசெல்பவன் திரும்பி ஆனந்தை பார்த்து தலையாட்டி சிரித்தபடி போகிறான்.
“இங்க வா” என்று செல்வத்தின் கரம்பற்றிஇழுத்துச்செல்லும் கான்ராக்ட்காரன் செல்வத்தை கழிவறைக்கு அருகிலுள்ள பழைய துருப்பிடித்த இரும்பு ட்ரம்முக்குள் இறக்கிவிடுகிறான். “இங்க பார்றா நா வந்து ட்ரம்மை தொறக்கறவரைக்கு சத்தம் போடாம உள்ளயே இருக்கனும் ம்.. ஆபீஸர் போனதும் வந்துருவேன் சரியா! கம்முனு உக்காந்திரு மூச்!” ட்ரம்மை மூடிவிட்டு செல்கிறான்.
சுற்றிலும் இருள்!

கருத்துகள்

 1. ரவி உண்மையில் இது முதல் முயற்சியாய் தெரியவில்லை. :-)

  சுற்றிலும் இருள், அருமையாக முடிந்திருக்கிறது கதை. இதே போல நிறைய கதைகள் படித்திருக்கிறேன். ஆனாலும் புதிதாகவே இருக்கிறது ”லீவு”.

  குழந்தைகளின் மனது இன்னும் சரியாக படம் பிடிக்கப்படாத களம், தொடர்ந்து இதே திசையில் பயணியுங்கள்.
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா25 மே, 2010 அன்று 11:07 PM

  ரொம்ப நல்லாருக்கு ரவி!

  இது பற்றி நான் ஏற்கனவே எழுத முயற்சித்தேன்.
  http://veyilaan.wordpress.com/2007/06/28/childlabour/
  ஆனால், உங்களளவு இல்லை.

  நிறைய எழுதுங்கள். முடிந்தால், இதையே குறும்படமாகவும்.....

  பதிலளிநீக்கு
 3. இது ஏற்கனவே அவர் எடுத்த குறும்படத்தின் கதைதான் வெயிலான் அவர்களே ...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்