திருப்பூரில் "கலைஇரவு”கோலாகலம்- ஒரு பதிவு




ஓயாத இயந்திர இரைச்சல்களுக்கு மத்தியில் ஆயாசமாக அலைகிறது மனம். அவ்வப்போது இலக்கிய அமர்வுகளும், இலக்கிய நண்பர்களுடனான சந்திப்புகளுமே கலை சார்ந்த எம்மனதிற்கு நிறைவளிப்பதாய் அமைகிறது.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நிகழ்வு முடிந்தபின்பான நண்பர்களுடனான அரட்டை களைகட்டும், உற்சாகமும்,புதுஎண்ணமுமாய் மனமும்,அறிவும் வண்ணமயமாகும்! அப்போது நேரம் ஒன்றே பிரிவினைவாத சக்தி!

வெறுமையை போக்கி மனதை பசுமையாய் ஆக்கும் இதுபோன்ற நிகழ்வுகளை கண்டாலே உள்ளம் குதியாட்டம் போடுகிறது.

அந்த வகையில் த.மு.எ.க.ச.வின் கலைஇரவு பற்றிய அறிவிப்பு மிக நல்லதொரு நிகழ்வை காணபோகும் ஆர்வத்தை தூண்டியது.

திருப்பூரின் மிக முக்கியமான நாள், சம்பள நாள். நகரமே பரபரப்பாய் இருக்கும்போது சனிக்கிழமை மாலை நடக்கும் கலைஇரவை எத்தனைபேர் கண்டுகொள்ளப்போகிறார்கள் என்றெண்ணியிருந்தேன்.
என் நினைப்பை தவிடுபொடியாக்கும் வகையில் அன்றுமாலை ஆயிரக்கணக்காணோர் கூடியிருந்தது மிகப்பரவசமாய் இருந்தது!

அடுத்தது இத்தனைபேர் ஆரம்பத்தில் கூடியிருந்தது மகிழ்ச்சி என்றாலும் நிகழ்ச்சி முடிவுவரை இத்துனைபேரும் கலையாமல் இருந்தால்தானே... ஒருவேளை கலைந்துவிட்டால்...? பார்ப்போம் (நிகழ்ச்சியின் வரவேற்புக்குழுவில் நானும் இருக்கிறேனென்றாலும் அப்போதைக்கு எனக்கு எந்த வேலையும் இல்லை) நானும் மக்களோடு அமர்ந்து நிகழ்ச்சியை காணத்துவங்கினேன்.

முதல் நிகழ்வாக கவிநயா பரதநாட்டிய குழுவினரின் பரதம் அரங்கேரியது.

சிறுவர், சிறுமியரின் கலை ஆர்வம் மெச்சத்தகுந்ததே! குழுவாய் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சிக்கல் இருக்கிறது போலும்,

இன்னும் ஒன்றிரண்டு அரங்கேற்றம் கண்டார்களேயானால் திறமை மிளிரும்!

அடுத்து வேலாஇளங்கோ அவர்களின் குழுவினரின் நாட்டுப்புறப்பாடல் மிக இனிமையாக இருந்தது், அதிலும் திண்டுக்கல் ராஜலட்சுமியின் “குரல்” நாலாப்புறமும் பட்டெதிரொலித்தது! சூழலுக்கு ஏற்றாற்போல் சொந்தவார்த்தைகளை போட்டு பாடி அசத்தியது பார்வையாளர்கள் மத்தியில் கரகோசம்.


அடுத்து “திருப்பூர் நாடகக்குழு” வின் “வரிசை” என்ற சமூக அவலம் சாடும் நகைச்சுவை நாடகம் நடந்தது, தோழர் தாண்டவக்கோன் அவர்கள் திறம்பட ஒருங்கிணைத்து நடத்தினார்.


அடுத்து அரங்கம் அதிர பறை அடித்து பரவசப்படுத்தினர் “திண்டுக்கல் சக்தி தப்பாட்டக்குழுவினர்.


பெண்கள் வீணை போன்ற மெல்லிய இசைக்கருவிகளை வாசித்துதான் அநேகம்பேர் பார்த்திருப்போம் ஆனால் அடிவயிரு அதிற,அதிற பறையடித்து ஆடியது நாடி,நரம்புகளில் காலாகாலமாய் அடிமைபடுத்தி வைத்திருக்கும் ஆணாதிக்க சமூகத்திற்கெதிராக கொப்பளித்துப்பொங்கிய கோபமாகவே தோன்றியது!

நிகழ்ச்சியின் இடையிடையே கவிஞர்கள் கோவைசதாசிவம்,இரா.சிந்தன்,தாண்டவக்கோன்,இளையபாரதி,ஜெயராம்,தேவயானை ஆகியோரின் கவிச்சரம் சிந்தனைகளை விதைத்தது. அதிலும் தாண்டவக்கோனின் “அறிவுத்திறப்பு” கவிதை ஒரு சமூக அவலங்களை சாமனியனுடனான கேள்வி நடையில் சாடியது கவனம் ஈர்த்தது!
இரா.சிந்தனின் “புத்தாண்டே வருக” வரும் புத்தாண்டு எவ்வாறு வேண்டும் என்ற சிந்தனின் சிந்தனை மிகவும் சிறப்பு கவிதையை சொல்லும் பாங்கு பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாய் இருந்தது!
அடுத்து கவிஞரும்,பேச்சாளருமான நந்தலாலா அவர்கள் பேசும்போது பாரதியாரைப்பற்றியும்,பாரதிதாசனைப்பற்றியும் பல்வேறு நுட்பமான தகவல்களை தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வோடு எடுத்துரைத்தமை அந்தபொழுதை பயனுள்ளதாக்கியது

அடுத்து உரைவீச்சு. த.மு.எ.க.ச பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் தமக்கே உரித்தான மிக இயல்பான நடையில் நறுக்கென்று கருத்துக்களை பதித்தார். “எதையும் இரண்டாக பார்க்கவேண்டும், இருவேறு கருத்தோட்டத்தை புரிந்து கொள்வது பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார், மேலும் தமிழில் பல்கலைக்கழகங்களில் “மானுடவியல்”என்ற ஒரு துறை இல்லாமலிருக்கிறது அதை தோற்றுவிக்கவேண்டும் என்றும் கூறினார்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை வரவேற்கிறோம் என்றும், இந்த சூழ்நிலையில் த.மு.எ.க.ச கேட்டுக்கொள்வதாக மைசூரில் மத்திய அரசின் தொல்லியல் சார்ந்த நிறுவனத்தில் கேட்பாரற்று கிடக்கும் பிராமி தமிழ் எழுத்து கல்வெட்டை ஆராய வேண்டும், ஆட்சிமொழியாக தமிழ் மொழியை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் சமச்சீர் கல்விப்பாடத்திட்டத்தில் பெரியாரி்ன் கருத்துக்களுக்கும், மூடநம்பிக்கை எதிர்ப்பு பாடத்தி்ற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் ராமகோபாலனை முற்போக்காளர்கள் கண்டிக்கவேண்டும் என்றும் மிகச்சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
அடுத்த நிகழ்வாக மேடையில் மூன்று குறும்படங்கள் வெளியிடப்பட்டன
என்னுடைய குறும்படம் “கண்ணாமூச்சி” தமிழ்செல்வன் தோழர் அவர்கள் வெளியிட்டார். (படத்தில் பின்னால் கண்ணாடி அணிந்து நிற்பவர் என் நண்பரும் படத்தின் எடிட்டருமான தே.ராம்)

கார்த்தியின் ‘(க)தண்ணீர்தேசம்’,இரணியனின் ‘சரஸ்வதி ஒரு தரம்’ வெளி்யிடப்பட்டன.


மணி12 நள்ளிரவு. நிகழ்ச்சி அறிவிப்பாளர் அடுத்த நிகழ்வு தஞ்சை s.p.பாஸ்கரின் பலகுரல் என்று அறிவித்தார், “பலகுரலா...! சரி எழுந்து போய் ஒரு டீ சாப்பிட்டு வரலாமென எழுந்து சென்றேன். டீயை ஆர்வமாய் குடிக்கமுற்பட ஒலிபெருக்கியில் மிருதங்க இசை கணீர் என்று கேட்டது. மேடையை நோக்க பாஸ்கர் மட்டுமே நின்றிருந்தார் கையில் எந்த இசைக்கருவியும் இல்லை, அவர் தன் வாயிலேயே பல்வேறு இசைக்கருவிகளை மிக அற்புதமாக இசைத்துக்காட்டி ஆச்சர்யப்படுத்தினார் . மிருதங்கத்திற்கும்,கஞ்சிராவிற்கும்,மோர்சிங்கிற்கும் இடையே நடந்த மும்முனை போட்டிக்கசேரி, அதிஅற்புதமான அனுபவமாய் இருந்தது. பலகுரல் என்று சினிமா நடிகர்களின் குரலையே ஓயாது ஒப்பிக்கும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல நான் என்று காட்டினார். அதோடு அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் நாட்டுப்புற இசைக்கலைஞர்களை சாதிஅடிப்படையில் அவமானப்படுத்தும் சூழலே உள்ளது, அவர்களுக்கு உரியமரியாதை இல்லையென்று வருத்தப்பட்டது கவலையளிக்கத்தக்கதாய் இருந்தது. ஆம் உள்ளபடியே இது வெட்ககேடான விசயமாகும்!

அடுத்து இரண்டு மணி நேரத்திற்க்கு கூட்டத்தை கட்டிப்போட்ட நிகழ்ச்சிகள்..........................

-அடுத்த பதிவில் முடிக்கிறேன்!

கருத்துகள்

  1. நல்ல தொகுப்பு ரவி!

    அன்றிரவு ஊரில் இல்லாததால் கலந்து கொள்ள முடியவில்லை.

    கண்ணாமூச்சி படைப்பிற்கும் வெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள்!!!!

    பதிலளிநீக்கு
  2. ரவி நல்லா இருக்குங்க முழுவதும் எழுதிட்டிங்களா? இல்லை இன்னும் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்