பாக்கியம் சங்கர் கவிதைகள்

இந்தவார ஆனந்தவிகடனில் எனது அன்புநண்பர் பாக்கியம் சங்கர் அவர்களின் கவிதைகள் வெளிவந்துள்ளன.

ஆனந்தவிகடன் கையில் இல்லையா?! இதோ அந்த கவிதைகளை இங்க படீங்க பாஸ்!



மன்னிக்காதீர்கள் நண்பர்களே!
*********************************
முடிக்கப் பெறாத கட்டடத்தின்
மேல் மாடியில்
அகாலத்தில் அழுதுகொண்டிருக்கிறாள்
காக்காணி நிலமென்றாலும்
தன் பூமி தன் வாழ்வென
கர்வம்கொண்டிருந்தவள்
எல்லாம் பொய்த்துப் போனபின்
சித்தாள் வேலை செய்துகொண்டிருக்கிறாள்
நிரம்பப் போதையில்
மேஸ்திரி ஜாடை காட்ட
இந்தச் சோறும் போய்விடுமோவென
போர்வைக்குள் நுழைந்துகொள்கிறாள்
எந்த நாதியுமற்ற அவள்!
**********************************************

லீல் செளத்ரியின் பாடல் கேட்டபடியே
இரவுகளை வாழ்ந்துகொண்டிருக்கிறான் தேசாந்திரி
கூடாரத்தின் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும்
ஒளிந்து விளையாடும் பிள்ளைகள்
ஜில்லிடும் இப்பொழுதில்
சூடாகச் சாயா குடிக்கும்
இவ் வம்சத்தின் மூத்த கிழவன்
அலைந்து திரியும் இப் பறவைகளுக்குக்
கூடும் இல்லை வேர்களும் இல்லை
இதைப்பற்றிய விசனமும் இல்லை!
****************************************************

ன் இப்படி என்றேன்
ஏன் கூடாது என்றாள்
இந் நிலவொளியில் என் மடிகிடந்து
கதைப்பாயா என்று கேட்டேன்
அடக்க மாட்டாமல் சிரித்தவள்
நீ கவிஞனா எனக் கேட்டாள்
இந்தத் தொழிலுக்கு ஏன் வந்தாய் என்றேன்
பிடிச்சிருக்கு என்றாள்
மேலும் கேட்கத் தோணாமல்
அவள் மடி புதைந்தேன்
என்னை ஆற்றுப்படுத்தியவள்
சிரித்தபடியே இருந்தாள்
தேவதைகள் அவ்வப்போது
காட்சியளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
*************************************************************

வுனுக்குப் போகலாமென்றிருந்தது
பொரித்த புரோட்டாக்களைச்
சொல்லிவிட்டு காத்துக்கொண்டிருந்தேன்
களைந்த கேசமும் வெறித்த கண்களுமென
ஆடைகளற்றுத் தேமேவென
சாயா கேட்டுக்கொண்டிருந்தான்
பால்ய காலத்து நண்பன் கனகசுப்ரமணி
பயங் கலந்தபடி அவ்வப்போது
என்னைப் பார்த்துக்கொண்டே
முகம் முழுக்கச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்
சில ரூபாய் தாள்களை திணித்துவிட்டு
ஏதும் செய்ய இயலாதபடிக்கு நகர்ந்துவிட்டேன்
பெருங்குரலெடுத்து ஓலமிட்டான் நண்பன்
உலகத் துன்பத்தின் ஒட்டுமொத்தக் குரலாக
அது இருந்தது!
************************************************************

மூச்சுக்கு முந்நூறு தடவை
ஓடுகிறாள் சாடுகிறாள்
அவளின் வயதொத்த பெண்ணின்
கால்களைக் கழுவுகிறாள்
பெடிக்யூர் என மொழிபெயர்க்கிறாள்
அவளின் எஜமானி
பூ வரைந்த தட்டுக்களையும்
விதவிதமான குவளைகளையும்
பத்திரமாகத் துடைத்துவைக்கிறாள்
தனக்கேன ஒதுக்கப்பட்ட
அலுமினியத் தட்டில்
கறிச்சோறும் புளிக்கறியும் இருந்தாலும்
தேமேவென உண்கிறாள்
எஜமானர்கள் வெளிக் கிளம்ப
சுருண்டுகொள்ளும் பூனையாட்டம்
அயர்ந்து உறங்குகிறாள்
ஒரு பிணத்தைப்போல!
**************************************************

ப்படியாக
நாம் கடந்து செல்லும்
இம் மனிதர்களைப்பற்றி
கவிதை எழுதிக்கொண்டிருக்கும்
இந்தக் கையாலாகாதவனை
மன்னிக்காதீர்கள் நண்பர்களே
பார்வையாளன்
ஒருபோதும் பங்கேற்பாளனாக
முடியாதென்பதை
நீங்களும் அறிவீர்கள்தானே! . (நன்றி-ஆனந்தவிகடன்)
**********************************

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்